கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி வந்த சித்த மருத்துவர் தணிகாசலம் கைது
கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிவந்த சித்த மருத்துவர் தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேட்டில் ரத்னா சித்த மருத்துவமனை எனும் பெயரில் மருத்துவமனை நடத்தி வந்த தணிகாசலம் என்பவர், தன்னிடம் 6 கொரோனா நோயாளிகளை ஒப்படைத்தால் ஒரே நாளில் குணமடைய செய்து விடுவேன் என்றும், அதற்கான மருந்து தன்னிடம் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ பதிவு வைரலான நிலையில், தவறான, ஆதாரமற்ற தகவல்களை அவர் பரப்புவதாகவும், தணிகாசலம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தணிகாசலம் மீது தொற்றுநோய் தடுப்பு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தடை உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அவர் வெளியிட்டிருந்த வீடியோ பதிவின் IP address மூலம் தணிகாசலம் தேனியில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை போலீசார், தணிகாசலத்தை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.
Comments