தண்ணீர் இல்லாமல் கைகளை சுத்தமாக வைக்க இயலுமா ? கோயம்பேடு தொழிலாளர்கள் பரிதவிப்பு ..
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளிகளை அழைத்துச்சென்று தனியார் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தி கொரோனா சோதனை நடத்தப்பட்டது.
தண்ணீர் வசதி இன்றி தனி நபர் இடைவெளி இல்லாமல், அங்கும் கூட்டம் முண்டியடிப்பதால் மேலும் பலருக்கு கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
இங்கே சாப்பாடு வாங்குவதற்காக தனி நபர் இடைவெளி குறித்து சிந்திக்க நேரமின்றி ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டிருப்பவர்கள் , கொரோனா பரிசோதனைக்காக அழைத்துச்செல்லப்பட்ட கோயம்பேடு தொழிலாளர்கள்..!
கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து அண்மையில் பரவிய கொரோனா தொற்றால் தமிழகமே மிரண்டு கிடக்கின்றது. கோயம்பேட்டில் பணி செய்த தொழிலாளர்கள் கொரோனா தொற்று பரிசோதனைக்கு அருகில் உள்ள தனியார் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு காலை தொடங்கி மாலை வரை சோதனை நடத்தப்பட்ட நிலையில் சாப்பாடு வழங்கப்பட்டாலும் , தண்ணீர் வசதி இல்லாமல் கையை கழுவ இயலாமல் காகிதத்திலும் தங்களது ஆடைகளிலும் துடைத்துக் கொண்ட அவலம் ஏற்பட்டதாக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினர்
தொழிலாளர்கள் தாங்கள் சாப்பிட்ட பொட்டலங்களை அப்படியே குப்பை போல குவித்து வைத்திருந்ததால் அந்த பகுதி சுகாதாரமின்றி காணப்பட்டது. பெரும்பாலான நபர்கள் முககவசம் இன்றி மெத்தனமாக கல்லூரிக்குள் சுற்றி திரிந்தனர். இரவு வேலைபார்த்த அசதியில் பலர் கல்லூரிக்குள் அப்படியே படுத்து உறங்கினர்
அந்த கல்லூரியில் தூய்மைபணியாளர்கள் எவரும் இல்லாததால் சுகாதார சீர்கேடாக மாறியது. ஒரு நாள் முழுவதும் இப்படி நெருக்கி அடித்துக் கொண்டு கொரோனா பரிசோதனை முடிந்து சென்ற இவர்களில், 30க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக கூறப்படுகின்றது.
அத்தகைய நபர்கள் மூலம் எத்தனை பேருக்கு கொரோனா நோய் தொற்று பரவி இருக்குமோ என்ற அச்சம் ஏற்ப்பட்டுள்ளது. அதே போல செவ்வாய்கிழமை கோயம்பேடு மார்கெட் மூடப்பட்ட நிலையில் மார்க்கெட்டை சுற்றி மருத்துவ கவச உடைகள், முககவசங்கள், கையுறைகள் அப்படியே சாலையில் வீசிச்செல்லப்பட்டுள்ளது. இவற்றை முறையாக சேகரித்து அழிக்க சுகாதார பணியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த ஓமந்தூரர் அரசு பல் நோக்கு மருத்துவமனை டீன் நாராயணபாபு, கவச உடைகளை கொரோனா நோயாளிகளுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டுமே அணிய வேண்டும் என்றும் பயன்படுத்தப்பட்ட முகக்கவசம் மற்றும் கையுறைகளை பாதுகாப்புடன் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்
கோயம்பேடு மார்க்கெட் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ள நிலையில் அதனை தூய்மைப்படுத்தி முழுவதும் கிருமி நாசினி தெளித்து
கிருகி தொற்றை முற்றிலும் அழிக்க நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments