செழிப்பாக நிவாரணம் வழங்காததால் சிறப்பாக ஏற்பட்ட சிக்கல்
கொரோனா நிவாரணமாக கோவை எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனால் வழங்கப்பட்ட பொருட்கள் தரம் குறைவாக இருப்பதாக கூறி தூய்மைப் பணியில் ஈடுபடும் பெண்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
பக்கத்து தொகுதி அதிமுக எம்.எல்.ஏக்கள் செழிப்பாக நிவாரணம் வழங்கியதால் தெற்கு பகுதி எம்.எல்.ஏவுக்கு ஏற்பட்ட சிக்கல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கோவையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தங்கள் தொகுதி மக்களுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் தனிப்பட்ட முறையில் நிவாரணப் பொருட்களை அள்ளிக்கொடுத்து வருகின்றனர்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கு 22 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பெட்டியை நிவாரணமாக வழங்கி வருகிறார். கோவை வடக்கு எம்.எல்.ஏ பி.ஆர் ஜி அருண்குமார், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி ஆகியோரும் நிவாரணப் பொருட்களை அட்டைப் பெட்டிகளில் அள்ளிக்கொடுத்துவரும் நிலையில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவான அம்மன் அர்ஜூனன், மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படத்துடன் தனது படத்தையும் பெரிய அளவில் துணிப்பையில் அச்சிட்டு வழங்கிய நிவாரணம் அவரது தூக்கத்தை கெடுத்துள்ளது.
எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன், சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் தனது சொந்தப் பணத்தில் இருந்து தொகுதியில் உள்ள 60 ஆயிரம் குடும்பங்களுக்கு 11 வகையான நிவாரண மளிகைப் பொருட்கள் வழங்கியதாக கூறப்படுகின்றது. கெம்பட்டி காலனி பகுதியில் பலருக்கு நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், தூய்மைப் பணியில் ஈடுபடும் பெண்கள் அம்மன் அர்ஜூனன் வழங்கிய நிவாரணப் பொருட்களை பிரித்து பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
கிணத்துக்கடவு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தரமான பொருட்களை அட்டைப் பெட்டியில் வழங்கி உள்ளதாகவும், தங்கள் தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் தரமில்லாத பொருட்களை வழங்கியதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அம்மன் அர்ஜூனன் தரப்பில் விளக்கம் அளித்த அவரது மகன் கோபால், நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்டு, தங்கள் மீது குற்றஞ்சாட்டும் பெண் திமுகவைச் சேர்ந்தவர் என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் குறைகூறுவதாகவும் தெரிவித்தார்
நிவாரணம் என்பது குறைவாக இருந்தாலும் அது மக்கள் பயன்படுத்தும் வகையில் தரமான பொருளாக இருக்க வேண்டும் என்பதே கோவை தெற்கு தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments