இந்தியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி 99.9 சதவீதம் வீழ்ச்சி
இந்தியாவில் முப்பதாண்டுகளில் இல்லாத வகையில் ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி 99 புள்ளி ஒன்பது விழுக்காடு சரிந்துள்ளது. உலகிலேயே தங்கம் அதிகம் பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் 50 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் 110 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தங்கம் இறக்குமதி 99 புள்ளி ஒன்பது விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது.
பண மதிப்பில் கணக்கிட்டால் கடந்த ஆண்டு ஏப்ரலில் முப்பதாயிரம் கோடி ரூபாய்க்கும், இந்த ஆண்டு ஏப்ரலில் 21 கோடியே 45 லட்ச ரூபாய்க்குத் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை அடுத்து விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது, ஊரடங்கால் நகைக் கடைகள் அடைக்கப்பட்டது ஆகியவையே தங்கம் இறக்குமதி வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்கள் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments