ரஜினியின் நிவாரணத்தை ஏற்க மறுக்கும் தயாரிப்பாளர்கள்..! படம் நடித்து கொடுக்க கேட்கிறார்கள்
தமிழ் திரை உலக தயாரிப்பாளர்கள் விடுத்த வேண்டுகொளை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் 750 நலிந்த தயாரிப்பாளர்களுக்கு நிவாரணமாக 20 டன் அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் வழங்க ஒப்புக்கொண்ட நிலையில், வசதியான தயாரிப்பாளர்கள் சிலர் நிவாரணப் பொருட்களை பெறுவது தங்களுக்கு அவமானம் என்று எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் தவிக்கும் தமிழ் திரை உலகின் பல்வேறு அமைப்புகளுக்கும் நடிகர் ரஜினிகாந்த் டன் கணக்கில் அரிசி,பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நிவாரண உதவியாக வழங்கி வருகிறார்.
அந்த வகையில் நலிந்த தயாரிப்பாளர்கள் 750 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க, ரஜினியிடம் தமிழ் திரைப்படப் பாதுகாப்பு சங்கத் தலைவர் கே.ராஜன் வேண்டுகொள் விடுத்திருந்தார். உடனடியாக நடிகர் ரஜினிகாந்த் நிவாரணம் வழங்க ஒப்புக்கொண்டார்.
இதற்கு பாராட்டுத் தெரிவித்தோடு எங்கு சென்று நிவாரணப் பொருட்களைப் பெற்றுக் கொள்வது என்ற விவரங்களையும் தயாரிப்பாளர்கள் வாட்ஸ் ஆப் குழுவில் கே.ராஜன் பதிவிட்டார்
அரிசி மூட்டைகளை அனுப்பி வைத்த நடிகர் ரஜினிக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நன்றிதெரிவித்து குரல்பதிவிட்ட திருமலை என்பவர் இந்த பெருமையை வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று பதிவிட்டதால் சர்ச்சை உருவானது
தமிழ் திரைஉலகின் முதலாளிகளான சினிமா தயாரிப்பாளர்களுக்கு , சம்பளம் வாங்கும் நடிகர் நிவாரணம் வழங்குவது கேவலம் என்றும் அப்படியே நிவாரணம் கொடுக்க விரும்பினால் 50,000 ரூபாயோ அல்லது 1 லட்சம் ரூபாயோ தனித்தனியாக வழங்கினால் கவுரவமாக இருக்கும் என்று வேலை படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான சுரேஷ் என்பவர் போர்க்கொடி உயர்த்தினார்.
நிவாரணம் வழங்கியது ரஜினியின் பெருந்தன்மை என்றாலும், தயாரிப்பாளர்கள் அரிசிக்கும் பருப்புக்கும் போய் நிற்ககூடாது. அது தன்மானத்துக்கு இழுக்கு என்று நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ் தெரிவித்து உள்ளார்.
இவற்றுக்கெல்லாம் மேலாக தயாரிப்பாளர் பாபு கணேஷ் என்பவர், ரஜினி நலிந்த தயாரிப்பாளர்களுக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க குறைந்த சம்பளத்தில் கால்சீட் தரவேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்
நடிகர் ரஜினிகாந்த் வழங்கிய நிவாரணத்தை வைத்து தயாரிப்பாளர்கள் சிலர் அரசியல் செய்வதாகவும், அதனால் தான் சில தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
Comments