கரவொலி எழுப்பி வரவேற்பு கண்கலங்கிய மருத்துவர்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் உடலைக்கூட அடக்கம் செய்ய விடாமல் தடுத்த மனிதநேயமற்ற சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வீட்டுக்கு வந்த மருத்துவர்களை கரவொலி எழுப்பி வரவேற்கும் நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடந்துள்ளன.
கொரோனா தொற்று உள்ளவர்களை காப்பாற்றுவதில், தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து சிகிச்சையளிக்கும் முன்களப் பணியாளர்கள்தான் மருத்துவர்கள்.
கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள் சிலர் உயிரிழந்த நேரத்தில், அவர்களின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த மனிதாபிமானமற்ற செயல்களும் சென்னை உள்ளிட்ட இடங்களில் அரங்கேறின.
இதனால், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மத்திய-மாநில அரசுகள் அவசரச் சட்டத்தை பிறப்பித்தன.
இந்த நிலையில் ஊண் உறக்கம் இன்றி, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வீடு திரும்பிய மருத்துவரை கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
பெங்களூரைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள். விஜயஸ்ரீ என்பவர் கடந்த 20 நாட்களாக வீட்டுக்குச் செல்லாமல் மருத்துவமனையில் தங்கியிருந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்தார்.
இந்நிலையில் வீடு திரும்பிய விஜயஸ்ரீக்கு அவர் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் நூற்றுக்கும் அதிகமானோர் கைதட்டி வரவேற்பளித்தனர். அதனை அவர் கண்களில் நீர் தழும்ப ஏற்றுக் கொண்டார்.
இதேபோல், கொரோனா வார்டில் சிகிச்சையளித்துவிட்டு 3 வாரங்கள் மருத்துவ சேவையாற்றி விட்டு வீடு திரும்பிய பெண்மணியை, அண்டை வீட்டார் மலர்தூவி வரவேற்றபோது அவர் கண்கலங்கினார்.
கொரோனாவால் நாடே முடங்கிக் கிடந்த தருணத்தில், இரவு பகலாகப் பணியாற்றி உயிர்களைக் காக்கும் பெரும் பொறுப்பை ஏற்று சேவையாற்றும் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் என்றென்றும் போற்றத்தக்கவர்கள்.
Comments