பல்வேறு தளர்வுகளுடன் அமலானது ....மூன்றாம் கட்ட ஊரடங்கு ...

0 2159

ஊரடங்கில் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள், உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இராமநாதபுரம் 

ராமநாதபுரத்தில் 15 சதவீத கடைகள் 40 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் செல்போன் ரீசார்ஜ் கடைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே திறந்துள்ளதாகவும், கும்பலாக நின்று பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்கி வருகின்றனர்.

கோவை

கோவையில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டவுன் ஹால், ஒப்பணக்கார வீதி, ராஜவீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் தனித்து செயல்படும் செல்போன், கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் , பேக்கரி உட்பட 30 சதவீதத்திற்கும் மேலாக திறக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி

ஆரஞ்சு மண்டல பகுதியான தூத்துக்குடியில் குளிர்சாதன வசதி இல்லாத நகை மற்றும் துணி கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று 20 சதவிகித கடைகள் திறக்கப்பட்டன.

திருச்சி

திருச்சியில் பெரியகடைவீதி, சின்னகடைவீதி, பாலக்கரை தில்லைநகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்பொருள்விற்பனை கடைகள், மின்னணு சாதன கடைகள், பெயிண்ட் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தியும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால், திருச்சி மாநகரில் மீண்டும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கும்பகோணம்

கொரோனா தொற்றை தடுப்பதற்காக கடந்த 40 நாட்களாக நடைமுறையில் இருந்த ஊரடங்கை தற்போது தளர்த்தியுள்ள நிலையில் கும்பகோணம் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக செல்போன் விற்பனைகடைகளில் பொதுமக்கள் குவியத் தொடங்கியுள்ளனர். ஒரு சில செல்போன் கடைகளில் உள்ளே செல்லும் போது கிருமி நாசினியை கைகளில் தெளித்து வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கின்றனர்.

கோவில்பட்டி, தூத்துக்குடி

ஊரடங்கு தளர்வு அறிவிப்பினை தொடர்ந்து கோவில்பட்டி நகரில் 65 சதவீத கடைகள் திறக்கப்பட்டிருந்தன. செல்போன் கடைகள், புத்தக கடைகள், எலக்ட்ரானிக்ஸ் சர்வீஸ் கடைகள், சில சிறிய நகைகடைகள், ஜவுளிகடைகள் என  திறக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் காவல்துறையினருடன் இணைந்து தன்னார்வலர்கள் போக்குவரத்தினை சரி செய்தனர். 

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நகரில் ஆங்காங்கே ஏராளமான கடைகள் திறக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் வருகையும் நகரில் அதிகரித்தது. பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியது போல நடமாடியதால் மாவட்ட ஆட்சியர் கிரண்குராலாவும், காவல்கணிப்பாளர் ஜெயச்சந்திரனும் அதிரடியாக களம் இறங்கி நகருக்குள் வலம் வந்த பொதுமக்கள் கூட்டத்தை கலைக்கவும், விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட கடைகளை அடைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

பேசின் பிரிட்ஜ்

இதனிடையே பேசின் பிரிட்ஜ் பகுதியில் சாலைகளில் இயக்குவதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ள ஆட்டோக்கள், சேர் ஆட்டோக்கள், கால்டாக்சிகள் தடையை மீறி அதிக அளவில் இயக்கப்பட்டன.

தஞ்சை

தஞ்சையில் கீழவாசல், ரயில்நிலையம், பர்மாபஜார் போன்ற பகுதிகளில் வெகுநாட்களுக்குபிறகு கடைகளை, உரிமையாளர்கள் காலையிலேயே வந்து கிருமி நாசினி தெளித்து சமூக இடைவெளிக்கான வட்டங்களை போட்டு திறந்தனர். இதனால் அந்த பகுதிகளில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

சேலம்

சேலத்தில் 40 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பெரிய கடைகள் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட நகைக்கடைகள் இன்று திறக்கப்படவில்லை. திறக்கப்பட்ட அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் திரளாக வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். பெரும்பாலான கடைகளில் கடைக்காரர்கள் கட்டாயம் சமூக இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்கிச் செல்லுங்கள் என தெரிவித்து வருகிறார்கள்

ஈரோடு

ஈரோடு மாவட்டம் சிவப்புநிற மண்டலத்திலிருந்து ஆரஞ்ச் நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ஊரடங்கு உத்தரவில் சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் 20 சதவிகித கடைகள் திறக்கப்பட்டன. பேக்கரிகள், பார்சல் மட்டும் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள உணவகங்கள், செல்போன் கடைகள், கணினி நிறுவனங்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.


வேடசந்தூர், திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கடைவீதியில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. இதனை அறிந்த பொதுமக்கள் பெரும்பாலனோர் முககவசம் அணியாமலும் சமூகஇடைவெளியை பின்பற்றாமலும் சென்று பொருட்களை வாங்கிச் சென்றனர். இதேபோல் சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகமாகவே இருந்தது.

செண்ட்ரல், சென்னை

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள சாலைகள் 40 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படுகிறது.

சென்னை

உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான ஹோட்டல்கள் திறக்கப்பட்டு பார்சல் மூலம் விற்பனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து உணவுகளை பார்சலில் வாங்கி செல்கின்றனர். வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதோடு, தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதும் காட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நெல்லை

நெல்லையில் சிறு வணிக நிறுவனங்கள், மொபைல் சர்வீஸ் செண்டர் ,கண்ணாடி கடைகள், 40 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. மாநகரை தாண்டி பிறபகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களால் கடந்த 40 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள் இன்று கூட்டமாக காணப்பட்டது.

தியாகராயநகர் ரங்கநாதன் தெருவிலுள்ள தனிக்கடைகளை வியாபாரிகள் திறந்த நிலையில், அப்பகுதிக்கு வந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் திறக்கப்பட்ட கடைகளை உடனடியாக மூட அறிவுறுத்தினர். மிகவும் குறுகலான பகுதி என்பதால் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது சாத்தியமில்லாதது என்பதால் கடைகளை மூட உத்தரவிட்டார். இதனால் பலநாள் கழித்து கடைகளை திறக்க ஆர்வமுடம் வந்த வியாபாரிகள் மீண்டும் கடைகளை அடைத்தனர். அதே போல் முன்னணி பெரிய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

பாரிமுனை என்.எஸ்.சி.போஸ் சாலையில் செல்போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உட்பட பல கடைகள் திறக்கப்பட்டன. அதே நேரம் பிராட்வே சாலை, பூமார்க்கெட் சாலை உள்ளிட்ட குறுகிய தெருக்களில் அமைந்துள்ள கடைகளை திறக்க காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. அதே போல் நெருக்கமாக அமைந்துள்ள பர்மா பஜாரிலுள்ள செல்போன் விற்பனை கடைகளும் மூடப்பட்டுள்ளன.

திண்டுக்கல்லில் அரசின் உத்தரவை மீறி குளிர்சாதன வசதி கொண்ட நகைக்கடைகள், துணிக்கடைகள் திறகப்பட்டுள்ளதால் நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ஹார்ட்வேர், பெயிண்ட், சிமெண்ட் விற்ப்னைக் கடைகள் மட்டுமே செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். ஆனால் சில இடங்களில் குளிர்சாதன வசதி கொண்ட வணிக நிறுவங்கள் தடையை மீறி திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. அதே போல் இயல்பு நிலைக்கு திரும்பியது போல பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர்.

சென்னை திருவான்மியூர், அடையாறு பகுதிகளில் அனைத்து சிக்னல்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில், இயல்பான வாகனப் போக்குவரத்து காணப்பட்டது.சென்னை ரிச்சி தெருவில் இயங்கி வரும் கடைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறுகலான பகுதி என்பதால் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதில் சிரமம் ஏற்படும் எனக் கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனை சாலையில், வழக்கத்தைவிட வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு வரும் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. அவ்வாறு வருபவர்களின் வாகனங்கள் சாலையோரமாக நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சூளைமேடு பகுதியில் பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள் உள்ளிட்ட கடைகள் 40 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. இன்று முதல் கத்திரி வெயில் துவங்கியுள்ள நிலையில் ஏசி, மின்விசிறி, ஏர்கூலர் போன்ற பொருட்களை மக்கள் வாங்கி சென்றனர்.

அதே சமயம் ஹார்டுவேர் கடைகள், மீன் தொட்டி விற்பனையகம் போன்ற கடைகளும் திறக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது.

அண்ணா நகர் பகுதியில் செல்போன் விற்பனையகம் மற்றும் பழுது நீக்கும் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பெரும்பாலும் இளைஞர்கள் திரண்டிருந்த நிலையில், தனிநபர் இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments