பாதிப்பு குறைந்த இடத்தில் தளர்வுகள் தளர்த்தப்பட்டு நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிப்பு...
நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளபோதிலும், மாநிலங்களை பொறுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் காட்சிகள் மாறியுள்ளன.
கோவா : கோவா மாநிலத்தில் சலூன் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா:ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலும் சலூன் கடைகள் திறந்துள்ளன. விஜயவாடாவில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க சென்றவர்களால் சாலைகளில் கூட்டம் காணப்பட்டது.
அசாம் : அசாம் தலைநகர் குவஹாத்தியிலும் மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் அதிகரித்து காணப்பட்டது.
மகாராஷ்டிரா : மஹாராஷ்டிராவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாசிக்கில், முகக் கவசங்களுடன் பணிக்கு வந்தவர்கள், உடல் வெப்ப பரிசோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர். இதேபோல, ஊழியர்களை அழைத்து வருவதற்கான வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
டெல்லி : தலைநகர் டெல்லியில், கட்டுமானப் பணிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டுமானத் தொழிலாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வீட்டுவேலை செய்யும் பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளபோதிலும், உரிமையாளர்கள் இப்போது தேவையில்லை என்று கூறிவிட்டதாகவும், சுமார் 2 மாதங்களாக வேலையின்றி இருப்பதாகவும் சிலர் வேதனை தெரிவித்தனர்.
கர்நாடகா : கர்நாடகத்தில் தொழிலாளர்கள் மாநிலத்திற்குள்ளேயே சொந்த ஊருக்கு செல்ல பேருந்து வசதிகளை அரசு செய்துள்ளது. ஊர் திரும்ப விரும்பும் தொழிலாளர்கள் பெங்களூரில் பதிவு செய்துகொண்டனர். ஏற்கெனவே பதிவு செய்து கொண்டவர்களுக்கு, கொரோனா அறிகுறி உள்ளதா என பரிசோதனை நடத்தி, உணவு, குடிநீர் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர். 3 நாட்களுக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது.
Comments