மது வாங்க, கட்டுக்கடங்காத ஆர்வத்தில் பாய்ந்த குடிமகன்கள்

0 9925

சுமார் 40 நாட்களுக்குப் பிறகு, மதுவிற்பனை அனுமதிக்கப்பட்ட மாநிலங்களில், மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. டெல்லியில் கூட்டத்தை கட்டுப்படுத்த லேசான தடியடி நடத்தப்பட்டது.

ஊரடங்கால் மதுக்கடைகள் திறக்காததால், மதுப் பழக்கம் உள்ளவர்கள் கடந்த 40 நாட்களாக பெரும் ஏமாற்றத்துடன் காணப்பட்டதோடு, சிலர் விபரீத முயற்சிகளிலும் இறங்கினர்.

இந்நிலையில், ஊரடங்கின் மூன்றாம் கட்டத்தில்,டெல்லி, சத்தீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து, பிற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மடை திறந்த வெள்ளம் போல, குடிமகன்கள் மதுக்கடைகளுக்கு படையெடுத்ததால், பல பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.

சத்தீஸ்கரில், கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மது வாங்க வருபவர்கள் முறையாக சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வட்டங்களும் வரையப்பட்டிருந்தன.

ஆனால், ராஜ்நந்தகோன் என்ற இடத்தில், மதுக் கடையைத் திறந்தவுடன் ஏராளமானோர் திரண்டதால், விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன.

தமிழக எல்லையில், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் திறக்கப்பட்ட மதுக்கடைகளில், திருவிழாவை போல மதுப்பிரியர்கள் குவிந்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, ஆந்திர எல்லையில் அம்மாநில அரசுக்கு சொந்தமான மதுபான கடை இன்று திறக்கப்பட்டது. 40 நாட்கள்  மது கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த குடிமகன்கள், தமிழக பகுதியிலிருந்து அந்த கடைக்கு படையெடுத்தனர். சோதனை சாவடிகளில் சோதனைகள் கடுமையாக்கப்பட்டதால் கிராமபுறங்களில் உள்ள மாற்று வழிகள் மூஸம் மதுபான கடைக்கு சென்றனர்.

ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூரில் மதுக்கடை முன்பாக கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. முகக் கவசம் அணிந்திருந்தாலும் தனிமனித இடைவெளியைப் பற்றி கவலைப்படாமல் முண்டியடித்துச் சென்றனர்.

டெல்லியில் திறக்கப்பட்ட சுமார் 100 மதுக்கடைகளில் குடிமக்கள் கூட்டம் அலைமோதி, சமூக இடைவெளி காற்றில் பறந்ததால் அவை திறந்த வேகத்திலேயே மூடப்பட்டன.

டெல்லியில் 90 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. 4500 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பரவி 64 மரணங்கள் பதிவாகி உள்ள நிலையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

கடைகள் திறக்கும் முன்னரே அங்கு திரண்ட நூற்றுக்கணக்கானோரை கட்டுப்படுத்த காவல்துறையினர் லேசாக தடியடி நடத்தினர். எனினும் கூட்டம் கட்டுக்குள் வராததால் பல மதுக்கடைகள் மூடப்பட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments