வெளியூர் செல்வோருக்கு கொரோனா பரிசோதனை அவசியம்?
சென்னையில் இருந்து அரசின் அனுமதியுடன் பாஸ் வாங்கிச்செல்லும் நபர்களை பிறமாவட்ட நிர்வாகங்கள் ஊருக்குள் அனுமதிக்க மறுத்து தனிமைப்படுத்தி வருகின்றன. வெளியூர் செல்ல விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனையின் அவசியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு,திருமணம்,மருத்துவம் உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களுக்காக சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வோருக்கு இ- பாஸ் என்கிற பயண அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையிலிருந்து அனுமதிச் சீட்டுடன் செல்லும் நபர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஊருக்குள் நுழையவிடாமல் தடுப்பதாகவும் ஊருக்கு வெளியே தனிமை சிகிச்சை மையத்தில் வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் பனான்குளம் கிராமத்தில் 45 நாட்களாக தனிமையில் உள்ள இருதய நோயாளியான தனது தந்தைக்கு மருந்து வாங்கி கொடுப்பதற்காக 51 வயதான ராஜ்குமார் என்பவர் சென்னை மாநகராட்சியிடம் இ-பாஸ் பெற்றுள்ளார். 2ந்தேதி காலை 8 மணிக்கு சென்னை பெருங்களத்தூரில் இருந்து தனது மனைவியுடன் அவர் காரில் புறப்பட்டார்.
பல மாவட்டங்களைக் கடந்து சென்றபின், மாலை 4 மணிக்கு விருதுநகர் மாவட்ட எல்லையை நெருங்கியபோது ராஜ்குமாரின் கார் தடுத்து நிறுப்பட்டதாக கூறப்படுகின்றது. கொரோனா சிவப்பு மண்டலமான சென்னையிலிருந்து சென்று இருப்பதால் தங்கள் மாவட்ட சாலையில் பயணிக்க அனுமதி இல்லை என்ற ஆட்சியரின் உத்தரவின் பேரில், பைபாஸ் சாலையில் சென்றவர்களை ஊருக்குள் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ராஜ்குமாருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆரோக்கியமான நிலையில் இருந்த அவர்கள் இருவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக கூறபடுகிறது.
ராஜ்குமார் போலவே, சென்னையில் இருந்து உரிய அனுமதியுடன் காரில் சென்ற 30க்கும் மேற்பட்டவர்களுக்கு வலுக்கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கைக்குழந்தையுடன் வந்திருப்பவர்களும் இதில் அடக்கம். மாவட்ட ஆட்சிதலைவரின் உத்தரவு என்பதால் மருத்துவர்களாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை.
6 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனைக்குள் செல்ல மறுத்த நிலையில், உணவில்லாமல் தவிக்கவிட்டு இரவு 10 மணிக்கு மேல் ஒருவர் பின் ஒருவராக கார்களை எடுத்துச்செல்ல அனுமதித்துள்ளனர்.
இதற்கு மாவட்ட நிர்வாகத்தை மட்டுமே குறைகூறி பயனில்லை, சென்னை கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் 36 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலர் மாவட்ட எல்லையிலேயே மறிக்கப்பட்டு ஊருக்கு வெளியே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் மற்ற மாவட்டங்களில் சென்னைவாசிகளை கண்டால் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே திருக்கோவிலூரில் இருந்து ஈமக்கிரியை நிகழ்ச்சியில் பங்கேற்க கர்நாடக மாநிலம் செல்ல அனுமதிச்சீட்டு கேட்டு விண்ணப்பித்த இளைஞருக்கு பாஸ் மறுக்கப்பட்ட நிலையில், பொன்முடி எம்.எல்.ஏ நேரடியாக மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்திற்கு சென்று வாக்குவாதம் செய்து பாஸ் வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.
சென்னை மட்டுமல்ல, ஒரு மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல விரும்புவோருக்கு முன்கூட்டியே கொரோனா பரிசோதனை நடத்தி ரிசல்ட் நெகட்டிவ்வாக இருந்தால் மட்டும் ஆன்லைன் மூலம் இ பாஸ் வழங்கும் முறை கொண்டுவரப்பட்டால் மாவட்ட எல்லையில் இது போன்ற பிரச்சனைகள் உருவாகாது என்கின்றனர் காவல்துறையினர்.
தலைநகரில் அதிகரித்துவரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை சென்னைவாசிகளை மிரட்டுவதோடு மட்டுமல்லாமல் மற்ற மாவட்ட மக்களிடம் இருந்தும் தள்ளிவைக்கும் நிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளது.
Comments