நாடு முழுவதும் இன்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு தொடக்கம்...
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது 3-ம் கட்டமாக மே.17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
மத்திய அரசு அறிவித்தபடி விமானம்,ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்திற்கான தடையுடன், டாக்ஸி ,ஆட்டோ, சைக்கிள் ரிக்க்ஷாக்கள் போன்றவை இயங்குவதற்கும் தடை நீடிக்கிறது. பள்ளிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் செயல்படுவதில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த தடைகள் தொடர்வதோடு வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், உயிரியல் பூங்காக்கள், தங்கும் விடுதிகள் போன்றவை இயங்குவதற்கான தடையும் முழுமையாக தொடர்கிறது. திருமண நிகழ்ச்சி, இறுதி ஊர்வலம் போன்றவற்றிற்கு ஏற்கனவே இருந்த நடைமுறைகள் தொடர்கிறது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து அனைத்து இடங்களிலும், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படவும், உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பார்சல் மட்டும் வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் 10 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்படவும், மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 50 சதவித ஊழியர்களுடன் இயங்கவும், கிராமப்புறங்களில் நூறு நாள் வேலைதிட்டத்தை தொடரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் தங்கி இருந்தால், அப்பணிகள் அனுமதிக்கப்படுகிறது.
நகர்ப்புறங்களில் உள்ள முடிதிருத்தகங்கள், அழகு நிலையங்கள் தவிர, ஹார்டுவேர், சிமெண்டு, கட்டுமானப்பொருட் கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப்பொருள், மின் மோட் டார், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனி கடைகள், கொரோனா முன்னெச்சரிக்கையுடன் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர், உரிய அனுமதி பெற்ற பின்னர் பணிபுரியவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மருத்துவமனைகள், மருந்தகங்கள் போன்றவை முன்பு போலவே கட்டுப்பாடு இன்றி முழு நேரமும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும்போது பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணியவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
Comments