சுழன்றடிக்கும் கொரோனா முடுக்கிய பணிகளால் 10,000 பேர் டிஸ்சார்ஜ்
இந்தியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 700- ஐ நெருங்கி உள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா, இந்தியாவை பொறுத்தவரை 8 திசை களிலும் சுற்றி, சுழன்றடித்து வருகிறது. போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில், 10 ஆயிரத்து 887 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, வைரஸ் தொற்றால் 2 ஆயிரத்து 487பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் மட்டும் 83 பேரை கொரோனா காவு வாங்கி உள்ளது.
மஹாராஷ்டிராவில்,கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 300 ஐ எட்ட, பலி 521 ஆக அதிகரித்தது.குஜராத்தில் பாதிப்பு, 5 ஆயிரத்தை தாண்ட, டெல்லியில் வைரஸ் தொற்று உறுதி ஆனவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து விட்டது.
தமிழகத்தில் ஒரே நாளில் 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி விட்டது. உயிரிழப்பு, 30 ஆக உயர்ந்தது.மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நோக்கி முன்னேற, உத்தரபிரதேசத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 700 - ஐ நெருங்கி உள்ளது.
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 600 - ஐ நெருங்க, தெலங்கானா வில் வைரஸ் தொற்று உறுதியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்டது.மேற்கு வங்காளத்தில் 922 பேர் பாதிக்கப்பட, ஜம்மு - காஷ்மீரில் இதன் எண்ணிக்கை 700ஐ தாண்டி விட்டது.பஞ்சாபில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 100 ஐ தாண்டியது.
இதன்மூலம், வைரஸ் தொற்றுக்கு, ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட மாநிலங்க ளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
கர்நாடகாவில் 614 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை. பீஹாரில் 482 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து672 ஆக உயர்ந்தது. வைரஸ் தொற்றுக்கு இரை ஆனோர், ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, உலக நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு மிகவும் குறைவாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
Comments