துப்பாக்கி குண்டு பாய்ந்து வனக்காப்பாளர் படுகாயம்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வேட்டை தடுப்பு பணிக்குச் சென்ற வனக்காப்பாளர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறையூர் அருகே உள்ள பச்சைமலை பூதக்கால் வனப்பகுதியில் வனவிலங்குகளை கள்ளத் துப்பாக்கியை பயன்படுத்தி சிலர் வேட்டையாடுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனக்காப்பாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட காவலர்கள் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் வனப்பகுதியில் நடமாடிய ஒருவரை பிடிக்க முயன்றபோது அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை தூக்கி எறிந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்தது குண்டு பாய்ந்து வனக்காப்பாளர் வீரபாண்டியன் படுகாயம் அடைந்தார்.
அருகில் இருந்தோர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தப்பியோடிய நபரை தனிப்படை அமைத்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
Comments