கொரோனா முன்கள பணியாளர்களுக்கு முப்படைகள் சார்பில் மலர் தூவி மரியாதை

0 3586

கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னின்று போராடி வரும் சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முப்படைகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. போர்விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. 

ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து புறப்பட்ட சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் போர் விமானங்கள் 2, முன்களப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் புகழ்பெற்ற தால் ஏரியின் மீது வட்டமடித்தன.

தொடர்ந்து அந்த விமானங்கள் இரண்டும் பஞ்சாப் மாநிலம் சண்டிகரிலுள்ள சுக்னா ஏரியின் மீதும் வட்டமடித்தன.

அவை இரண்டும் ஸ்ரீநகர் முதல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை பறந்து மரியாதை செலுத்த உள்ளன.

அதே போல் காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், டெல்லியிலுள்ள தேசிய காவலர் நினைவகத்தின் மீது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. மேலும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர்விமானங்கள் டெல்லி ராஜபாதையில் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அணிவகுப்பில் ஈடுபட்டன.

ஹரியானா மாநிலம் பன்சுக்லா (Panchkula) பகுதியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அரசு மருத்துவமனை மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தின. மருத்துவமனைக்கு வெளியே இந்திய ராணுவத்தினர் பேண்டு வாத்தியங்களை இசைத்து மரியாதை செலுத்தினர்.

பனாஜியில் அமைந்துள்ள கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீது, மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மலர்த்தூவியது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைகழகம் மீது இந்திய விமானப்படை விமானங்கள் மலர்தூவி மரியாதை செலுத்தின.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள சிராயு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மலர்தூவி மரியாதை செலுத்தியது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மருத்துவம் உள்ளிட்ட கொரோனா முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், விமானப் படைக்கு சொந்தமான Su-30 ரக போர்விமானங்கள் மரைன் டிரைவ் பகுதியிலிருந்து அணிவகுப்பில் ஈடுபட்டன. அதே போல் கடற்படைக்கு சொந்தமான ஐஎன்ஹெச்எஸ் அஸ்வினி கடற்படை மருத்துவமனை ஊழியர்கள் மீது விமானப்படை ஹெலிகாப்டர் மலர்தூவி மரியாதை செலுத்தியது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அமைந்துள்ள கலிங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீது விமானப்படை விமானங்கள் வட்டமடித்து மரியாதை செலுத்தின.

கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள விக்டோரியா மருத்துவமனை மீது விமானப்படை போர்விமானங்கள் மலர்தூவி மரியாதை செலுத்தின.

வங்காள விரிகுடா கடல்பகுதியில் ஐஎன்எஸ் ஜலஷ்வா போர்க்கப்பலில், கொரோனா முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், டெல்லி தேசிய காவலர் நினைவகத்தில் முப்படைகளின் தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.

 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் மருத்துவமனை மீது விமானப்படை ஹெலிகாப்டர் வட்டமடித்து மரியாதை செலுத்தியது. அதே போல் லே பகுதியிலுள்ள எஸ் என் எம் மருத்துவமனை மீதும், மேகலயாவின் ஷில்லாங் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை மீதும் விமானப்படை ஹெலிகாப்டர் வட்டமடித்து மரியாதை செலுத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments