2021ஆம் ஆண்டுடன் மிகப்பெரிய விமானத்தின் தயாரிப்பை நிறுத்திக்கொள்ள ஏர்பஸ் முடிவு
உலகின் மிகப்பெரிய ஏ 380 விமானத்தின் தயாரிப்பை அடுத்த ஆண்டுடன் நிறுத்திக்கொள்ள ஏர்பஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஏர்பஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஏ 380 வகை விமானத்தில் ஒரே நேரத்தில் பயணிகள் எண்ணூறு பேர் அமர்ந்து செல்ல முடியும்.
இந்த விமானம் இடை நிற்றலின்றி தொடர்ந்து 16 மணி நேரம் பறக்கும் ஆற்றல் மிக்கது. 73மீட்டர் நீளங்கொண்ட இந்த விமானம் இறக்கைகளுடன் சேர்த்து 80 மீட்டர் அகலம் உள்ளது.
ஒரு மணி நேரத்துக்கு ஆயிரத்து 185 கிலோமீட்டர் தொலைவு செல்லும் திறன்கொண்டது. ஒரு விமானத்தின் விலை சுமார் மூவாயிரத்து நானூறு கோடி ரூபாயாகும்.
எமிரேட்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், லுப்தான்சா உள்ளிட்ட முதன்மையான நிறுவனங்கள் இந்த விமானத்தைத் தங்கள் சேவையில் பயன்படுத்திக் கொண்டுள்ளன.
இத்தகைய 750 விமானங்களைத் தயாரித்து விற்க ஏர்பஸ் திட்டமிட்டிருந்தது. பிரான்சின் டொலூசில் உள்ள தொழிற்சாலையில் இதுவரை 242 விமானங்களைத் தயாரித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு தயாரிப்பை நிறுத்த ஏர்பஸ் முடிவு செய்துள்ளது.
Comments