ஊரடங்கில் சிக்கியவர்கள் சொந்த ஊர் செல்ல ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு
வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தினக்கூலித் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மாணவர்கள் உள்ளிட்டோரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நேற்று 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் பல்லாயிரக்கணக்கானோர் ஊர் திரும்பினர்.
புலம் பெயர் தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சொந்த ஊருக்குத் திரும்ப விரும்பினால் மாநில அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு விண்ணப்பித்தவர்களை அழைத்துச் செல்லுமாறு மாநில அரசுகள் கோரும் பட்சத்தில் சிறப்பு ரயில்கள் மூலமாக அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மொத்தமாக இலவச டிக்கட்டுகளை மாநில அரசுகளுக்கு ரயில்வே நிர்வாகம் அளிக்கிறது .
40 நாள் ஊரடங்கு காலத்தில் நேற்று முதல் ரயில் தெலுங்கானாவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு புறப்பட்டுச் சென்றது. 24 பெட்டிகளில் இடைவெளிவிட்டு அமர்த்தப்பட்ட 1250 தொழிலாளர்களுடன் அந்த ரயிலை ரயில்நிலைய அதிகாரிகள் பச்சைக்கொடி காட்டியும் கைதட்டியும் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மாலையிலும் இரவிலும் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இனி வரும் நாட்களில் இத்தகைய ஏராளமான சிறப்பு ரயில்களும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காகத் திருவனந்தபுரம், கொச்சுவேலி, எர்ணாகுளம் ஆகிய நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசு அதிகாரிகளின் வேண்டுகோளின்படி முன்பதிவல்லாப் பயணச் சீட்டுக்களை முன்கூட்டியே அச்சிட்டு வைக்க வேண்டும். தொழிலாளர்களின் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் பயணச்சீட்டுகளுக்கு ஆகும் ஒட்டுமொத்தக் கட்டணம் பெறப்படும். சிறப்பு ரயில்கள் குறுகிய காலத்தில் அறிவித்து இயக்கப்படும் என்பதால் அதற்குத் தேவையான அலுவலர்கள் அறிவிக்கப்பட்ட ஒருமணி நேரத்துக்குள் நிலையத்துக்கு வந்துவிட வேண்டும். நிலையத்துக்குள் நுழையுமுன் அனைத்துப் பயணிகளுக்கும் வெப்பநிலை கண்டறிய வேண்டும். நிலையத்திலும் ரயில்களிலும் பயணிகளும் ரயில்வே அலுவலர்களும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என ரயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Comments