கோயம்பேடு மார்க்கெட்டா ? கொரோனா மேடு மார்க்கெட்டா ? தொட்டதால் கெட்ட வியாபாரிகள்
தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தை என்ற பெருமைக்குரிய கோயம்பேடு மார்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி உள்ளது. கிலோவுக்கு 10 ரூபாய் குறைவு என கோயம்பேட்டில் முண்டியடித்து காய்கறிகளோடு கொரோனாவையும் வீட்டுக்கு வாங்கிச்சென்ற சிக்கனவாதிகளை தேடும் சோகத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
தமிழகம் கொரோனா தொற்றில் இரட்டை சதம் அடித்து அதிர்ச்சி அளித்திருக்கும் நிலையில் தலைநகர் சென்னை ஒட்டு மொத்தமாக ஆயிரத்தை கடந்து சென்னை வாசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருமாறி இருக்கின்றது.
கொரானா பரவுதலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள்முதல் அதிகாலையில் வியாபாரம், பின்னிரவில் வெளியூர் மற்றும் வெளிமாநில காய்கறிகளை இறக்குவது என்று சுறு சுறுப்பாக சென்னை மக்களின் அத்தியாவசிய தேவைக்காக இயங்கி வந்தது கோயம்பேடு மார்க்கெட்.!
3 தினங்களுக்கு முன்பு அங்கு உள்ள காய்கறி கடையில் பணிபுரிந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் பரிசோதனையில் அதிதீவிரம் காட்டினர். இதையடுத்து ஒரே நாளில் அங்கு 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து கோயம்பேடு மார்கெட்டை மூன்றாக பிரித்து பழங்கள் காய்கறிகள் மாதவரம் புதிய பேருந்து நிலைய வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே ஊரடங்கு காரணமாக ஃபால்ஸ்-சீலிங் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்த இருவர் தினமும் கோயம்பேட்டிற்கு வந்து காய்கறிகளை வாங்கி ஊருக்குள் சென்று விற்று வந்தனர். திடீர் வியாபாரிகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதியில் ஒன்றாக அமர்ந்து தாயம், பரமபதம் விளையாடிய பெண்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
மேலும் அவர்களிடம் காய்கறி வாங்கிச்சென்றவர்களை மாநகராட்சி அதிகாரிகள் தனிமையில் இருக்க அறிவுறுத்தி உள்ளனர். கோயம்பேட்டில் சுமைதூக்கும் தொழிலாளி மூலம் அவரது இரு குழந்தைகளுக்கும் கொரோனா பரவியதை அடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால், தங்கள் சொந்த ஊரை தேடிச் சென்ற 50க்கும் மேற்பட்ட கோயம்பேடு தொழிலாளர்கள் ஊருக்கு வெளியே 14 நாட்கள் தனிமையில் தங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கோயம்பேடு கொரோனா மேடாக மாறி இருக்கும் நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் என்ற அரசின் அறிவுறுத்தலை காதில் வாங்காமல், கடந்த 15 நாட்களாக கிலோவுக்கு 10 ரூபாய் விலை குறைவு என காய்கறிகள், பழங்கள் வாங்க அங்கு கூட்டத்தில் முண்டியடித்த எத்தனை சிக்கனவாதிகள் தங்களை அறியாமல் கொரோனாவை பெற்று சென்றுள்ளனரா? என்பது புரியாத புதிராக உள்ளது.
சென்னையில் மருத்துவ பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகின்றது.
அதே நேரத்தில் தனி நபர், கைகழுவுதல், முககவசம் அணிதல் போன்ற முறையான பாதுகாப்பு முன் எச்சரிக்கையை கையாண்டால் அதில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளலாம் மெத்தனம் கொரோனாவை வீட்டிற்கு அழைத்துவரும் என்பதற்கு கொரானாவால் பாதிக்கப்பட்ட சென்னைவாசிகளே சான்று.
Comments