நடுங்கும் உலக நாடுகள்... உயரும் கொரோனா பாதிப்பு...!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 34ஆயிரத்தை தாண்டி விட்டது. 51 ஆயிரம் பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்க, இதுவரை, 10 லட்சத்து 39 ஆயிரம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 64 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
உலுக்கும் கொரோனாவால், உலக நாடுகள் பல நடுங்கி வருகின்றன. ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு, அதிகரித்து வருகிறது.அந்த வகையில் அமெரிக்காவில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் பலியானதால், உயிரிழப்பு 64 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அங்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 95 ஆயிரத்தை தாண்டிவிட்டது.
இத்தாலியில் 285 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்குகிறது. ஸ்பெயினில் உயிரிழப்பு 25 ஆயிரத்தை எட்டுகிறது.இங்கிலாந்தில் 26 ஆயிரம் பேர் உயிரை காவு வாங்கிய கொரோனா, பிரான்ஸில், பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டி விட்டது.
பெல்ஜியத்தில் 7 ஆயிரத்து 500 பேரும், ஜெர்மனியில் 6 ஆயிரத்து 600 பேரும் கொரோனாவுக்கு இரை ஆகி விட்டனர்.ஈரானில், 6 ஆயிரம் பேரும், பிரேசிலில் 5 ஆயிரத்து 900 பேரும் பலி ஆக, நெதர்லாந்தில் உயிரிழப்பு 5 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று உறுதி ஆனதால், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 862 ஆக உள்ளது. பலி எண்ணிக்கையை பொறுத்தவரை, 4 ஆயிரத்து 633 என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர, கனடா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, மெக்சிகோ , அயர்லாந்து, ரஷியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனாவின் பாதிப்பும், உயிர்பலியும் உயர்ந்து வருகிறது.இதனிடையே ரஷிய பிரதமர் MIKHAIL MISHUSTIN - க்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.
Comments