தீதும் நன்றும் பிறர் தர வராது...! நோய்தொற்றிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள்...!
காய்கறி கடைக்காரர்கள், மளிகைக் கடைக்காரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது மற்றவர்களுக்கும் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.....
40 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நோய்த்தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அரசு பல்வேறு அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
நோயின் தீவிரத்தை பொருட்படுத்தாத மக்கள், தனிநபர் இடைவெளியின்றி காய்கறி மற்றும் மளிகைக்கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டமாக கூடுகின்றனர். நோயின் தாக்கம் ஏற்படுத்தும் விபரீதத்தை மக்கள் அறியாமல் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவலை தெரிவித்திருந்தார்.
சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சிலருக்கும், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று பரவியது கண்டறியப்பட்டுள்ளது.
கடை ஊழியர் அல்லது வியாபாரி ஒருவருக்கு தொற்று ஏற்படும்போது, பொருட்கள் மற்றும் காய்கறிகள் மூலமாக வீட்டுக்குள் கொரோனா வந்துவிடும் ஆபத்து இருப்பதை பொதுமக்கள் கண்டுகொள்வதே இல்லை. கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று காவல்துறையினரும் சுகாதாரத்துறையினரும் அறிவுறுத்தி வருகின்றனர். இதன் படி,
முடிந்த அளவுக்கு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தள்ளு வண்டிகளில் வரும் காய்கறிகளை வீட்டு வாசலில் வாங்குவதே நல்லது.மளிகைக் கடைகளுக்கு தினம் செல்வதைத் தவிர்க்கவும் .4 அல்லது 5 நாட்களுக்குத் தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் பதற்றப்பட்டு அதிகமாக பொருட்களை வாங்கிக் குவிப்பதையும் தவிர்க்க வேண்டும்.கிடைக்காதவற்றைத் தேடித் திரியாமல் கிடைப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்
சமூக தனிநபர் இடைவெளிகளைப் பின்பற்றுவதுடன், யாருடனும் நெருங்கி நிற்கவோ, கூட்டத்தில் முண்டியடிக்கவோ முயலக்கூடாது.இடைவெளி விட்டு வரிசையில் நின்று காத்திருந்து பொருட்களை வாங்க வேண்டும்.
வயதானவர்கள் பொருட்களை வாங்குவதற்கு உதவுவது நல்லது.வெளியே சென்று வீடு திரும்பியதும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.வாங்கிய பொருட்களை வெயிலில் காய வைப்பது அல்லது காய்கறிகளைக் கழுவி சுத்தம் செய்வது கூடுதலான பாதுகாப்பை அளிக்கும்.காய்கறிகள் மற்றும் பொருட்களை கழுவிய பின்னர் உடனடியாக மீண்டும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்
நம்மை நாமே தற்காத்துக் கொண்டால் கொரோனாவை நெருங்க விடாமல் விரட்டியடிக்கலாம் என்று கூறுகின்றன சமூக ஊடகங்கள். தீதும் நன்றும் பிறர் தர வாராது என்ற தமிழ்ப்பழமொழியையும் இங்கு நினைவுகூர்வது பொருத்தமானது.
Comments