எங்கள் பாப்கார்ன் எங்கள் உரிமை..! தியேட்டர் அதிபர் ஆவேசம்...
புதிய திரைப்படங்களை ஓடிடியில் விற்பது தங்கள் உரிமை என்று குரல் கொடுக்கும் சினிமா தயாரிப்பாளர்கள், திரையரங்குகளில் பாப்கார்ன் அதிக விலைக்கு விற்கப்படுவதாக இனி மேடையில் பேசினால் நடப்பதே வேறு என்று திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.
ஜோதிகா நடிப்பில் பொன்மகள் வந்தாள் படத்தை திரையரங்கில் வெளியிடுவதற்கு முன்பாக நேரடியாக ஓடிடியில் விற்ற சூர்யாவுக்கு ஆதரவாக சினிமா தயாரிப்பாளர்களும், எதிராக திரையரங்கு உரிமையாளர்களும் உரக்க குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஓடிடியில் படங்களை விற்பது தங்களது உரிமை என்று ஆவேசப்படும் தயாரிப்பாளர்கள், திரையரங்குகளில் சிறுபடங்களை திரையிடுவதில்லை என்றும், பாப்கார்னுக்கு அதிகவிலை வாங்குகிறார்கள் என்றும்., இனி எவராவது பேசினால் நல்லா இருக்காது என்று திருப்பூர் சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்திருந்தார்.
திருப்பூர் சுப்பிரமணியத்தின் பேச்சு தயாரிப்பாளர்களை மட்டுமல்ல திரையரங்கிற்கு படம் பார்க்க செல்லும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது, பாப்கார்ன் விலையை நிர்ணயிப்பது எங்கள் உரிமை என்று கறாராக பேசிய திருப்பூர் சுப்பிரமணியம், தனது பக்கம் உள்ள நியாத்தை விளக்கும் வகையில் மீண்டும் ஒரு குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நலிவடைந்த தயாரிப்பாளர் தனது படத்தை ஓடிடியில் விற்றால் பரவாயில்லை, நல்ல நிலையில் இருக்கும் சூர்யா போன்றோர் செய்ததால் சுட்டிக்காட்ட வேண்டியதாகி விட்டது என்று தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு முடிந்த பின்னர் தயாரிப்பாளர், வினியோகஸ்ர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அமர்ந்து பேசி ஓடிடி விவகாரத்தை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்ற தயாரிப்பாளர்கள் தெரிவித்த முடிவையும் திருப்பூர் சுப்பிரமணியம் ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஊரடங்கிற்கு பின்னர் திரையரங்குகளை திறக்க வாய்ப்பில்லை என்பதால் அதனை நாடி பொதுமக்கள் குடும்பத்துடன் செல்வது கேள்விகுறியாகி உள்ள நிலையில், டிக்கெட் கட்டணத்திலும், அங்கு விற்கப்படும் பாப்கார்ன் குளிர்பானம் விலையிலும் சலுகைகள் வழங்காமல் வீம்பு செய்தால் குடும்பத்துடன் திரையரங்கிற்கு ரசிகர்களை ஈர்ப்பது முற்றிலும் நின்றுபோகும் வாய்ப்பு உள்ளது. இதை திரையரங்கு உரிமையாளர்கள் உணராதவரை இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படபோவது இல்லை..!
Comments