சுமை தாங்கியின் சடலத்தை தூக்க.. இங்கே ஆள் இல்லை..! மரணித்த மனித நேயம்

0 13438

சென்னை ஜாபர்கான்பேட்டையில் சாதாரண சளிகாய்ச்சலில் அவதிப்பட்டவரை கொரோனா பாதிப்புக்குள்ளானவர் என கருதி வீட்டின் உரிமையாளரும், உறவினர்களும் வீட்டுக்குள் அனுமதிக்காத நிலையில், 53 வயது சுமைதூக்கும் தொழிலாளி ஒருவர் வீதியில் அனாதையாக உயிரிழந்தார். கொரோனா பீதியால் சடலம் 12 மணி நேரத்திற்கும் மேலாக தெருவில் கேட்பாரற்று கிடந்த சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை சென்டிரலில் சுமைத்தூக்கும் தொழிலாளியாக இருந்த, திருவண்ணாமலையை சேர்ந்த 53 வயது ரவி என்பவர், ஊரடங்கால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் அவதிப்பட்டதால் ஜாபர்கான் பேட்டையில் லட்சுமி நகரில் தனது சகோதரியின் வீட்டில் வசிக்கின்ற தாயை தேடிச்சென்றார். கடந்த 20 தினங்களுக்கும் மேலாக அங்கு தங்கியிந்த நிலையில் ஏற்கனவே காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரவிக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இருமிக்கொண்டிருந்த ரவியை வீட்டிற்குள் வைத்திருக்க கூடாது என்று வீட்டு உரிமையாளர் நிர்பந்தித்ததாக கூறப்படுகின்றது. இதனால் வீட்டுவாசலில் ரவி அமர்ந்திருந்துள்ளார். அங்கேயே அவருக்கு உணவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு ரவி இருமிக் கொண்டே இருந்த காரணத்தினால், அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்க கூடும் என்று அருகாமையில் வசிப்பவர்கள் நினைத்துள்ளனர்.

இந்த நிலையில் வீட்டு உரிமையாளர் லோகநாதன் ,மாநராட்சி சுகாதார ஆய்வாளரிடம் ரவி குறித்து புகார் அளித்துள்ளார். அவர்கள் வந்து ரவியை ஆம்புலன்சில் ஏற்றிச்சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு விட்டு மீண்டும் ஜாபர்கான் பேட்டையில் அவரது சகோதரி வீடடிற்கு முன்பு இறக்கி விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. இதன் பின்னரும் ரவியை வீட்டிற்குள் அனுமதிக்க வீட்டு உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வேறு வழியின்றி லட்சுமி தெருவில் இருந்து அப்பாதுரை தெருவிற்கு இடம்பெயர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி ரவி, சாப்பாடு தண்ணீர் கிடைக்காத நிலையில் அதிகாலை நேரத்தில் உயிரிழந்தார். ஆனால் அவர் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என்று மாநகராட்சி ஊழியர்களும் காவல்துறையினரும் கருதியதால் சடலம் பிளாட்பாரத்தில் கேட்பாரற்று கிடந்தது

பிறகு ரவிக்கு கொரோனா பாதிப்பு இல்லை சாதாரண சளிகாய்ச்சல் தான் என்று பரிசோதனை முடிவுவந்த பின்னரே, மாலை 4 மணிக்கு மேல் ரவியின் சடலம் எடுத்துச்செல்லப்பட்டது. தற்போது பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கில் ரவியின் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது .

வெறும் சளி, காய்ச்சல் இருந்தாலே கொரோனா இருக்கிறது என்று கருதி யாரையும் வெறுக்காமல் அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்வதே மனித நேயம் ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments