உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளான மே தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து...!

0 1416
மே தின வாழ்த்து

உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளான மே தினத்தை முன்னிட்டு, தொழிலாளர்களுக்கு ஆளுநர், முதலமைச்சர் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில், இரவு பகல் பாராமல் நாட்டின் நலனுக்காக உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு தேசம் மரியாதை செலுத்தும் நாள் இது எனக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றை முறியடிக்க இந்த மே தினத்தில் அனைவரும் உறுதி ஏற்போம் என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில், உரிமைகள் மறுக்கப்பட்டு, உழைப்புக்கேற்ற ஊதியமில்லாமல்,
காலநேரமில்லாமல் பணி செய்து, கொத்தடிமைகளாக அவதியுற்று இருந்த உழைக்கும் வர்க்கத்தினர், பல ஆண்டுகளாக ஒற்றுமையுடன் போராடி தங்களின் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாக மே தினம் விளங்குகின்றது என குறிப்பிட்டுள்ளார். உழைப்பே உயர்வு தரும், ஒளிமயமான வாழ்விற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, கடினமான உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்திடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகளை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், செந்நீரும் கண்ணீரும் சிந்திய தொழிலாளர்கள் சிகாகோ நகரில் மாபெரும் வெற்றிப் பேரணியை நடத்தி, மகத்தான உரிமைகளைப் பெற்ற, மேதினி போற்றும் மே முதல் நாளில், தொழிலாளர்களுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். ஒருபுறம் கொரோனா பேரிடராலும் மறுபுறம் மத்திய - மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் பரிதவிக்கும் தொழிலாளர் சமுதாயத்தின் பக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதுமே உறுதியுடன் துணை நிற்கும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments