ஊரடங்குக்குப் பின் டோக்கன்முறையைக் கைவிட்டு, ஸ்மார்ட் கார்டு மூலம் மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டம்
ஊரடங்கு முடிந்தபின் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும்போது டோக்கன்முறையைக் கைவிட்டு, ஸ்மார்ட் கார்டு முறையைப் பின்பற்ற உள்ளதாகக் கூறப்படுகிறது.
கொரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கப்படும் 40 நாள் ஊரடங்கு மே மூன்றாம் தேதி முடிவடைகிறது. அதன்பின் மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.
சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் வகையில் நிலையான இயக்க நடைமுறைக்கான வரைவை உருவாக்கியுள்ளது. அதில் ஒருமுறைப் பயணத்துக்கான டோக்கன் வழங்கும் முறையைக் கைவிடவும், அனைத்துப் பயணிகளுக்கும் காந்தத் தன்மை கொண்ட ஸ்மார்ட் கார்டு முறையை நடைமுறைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆன்லைனில் பணம் செலுத்தி இந்த ஸ்மார்ட் கார்டுகளை ரீசார்ஜ் செய்துகொண்டால் நுழைவாயிலில் செல்லும்போதே பயணக் கட்டணம் தானாகச் செலுத்தப்பட்டுவிடும். இதனால் பணம் கொடுத்தல், டோக்கன் வாங்குதல் ஆகிய தொடர்புகள் தவிர்க்கப்படும்.
Comments