கொரோனாவுக்கு தாய், சேய் உயிரிழப்பு... அரண்டு கிடக்கும் அந்த 100 பேர்..!
சென்னை கஸ்தூரிபாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆண்குழந்தை பெற்ற சிறிது நேரத்தில் 27 வயதான பெண் தனது குழந்தையுடன் பலியான நிலையில், தாய்க்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
தாமதமான ஆய்வு அறிக்கையால் அரண்டு கிடக்கும் அந்த 100 பேர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை எகிறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த 27 வயது இளம் பெண் ஒருவர், கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் பிரசவத்தின் போது, தனக்கு பிறந்த ஆண்குழந்தையுடன் பலியானார். தாய் மற்றும் சேயின் சடலங்கள் உடனடியாக கணவரிடம் ஒப்படைக்கப்பட நிலையில் இருவரது சடலங்களையும் ஊர் கூடி அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருந்தது ஆய்வில் தாமதமாக தெரியவந்துள்ளது. அந்த பெண்ணின் கொரோனா முடிவு வெளியாவதற்கு முன்பாகவே சடலத்தை ஒப்படைத்ததால், தற்போது இறுதி சடங்கில் பங்கேற்ற கணவன் உள்ளிட்ட உறவினர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
மேலும் கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், செவிலியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களையும் சோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தியுள்ளனர். அத்தோடில்லாமல் அன்றைய தினம் அந்த மருத்துவமனையில் பிரசவவார்டு வந்து சென்றவர்களையும் அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தமாக 100 பேர் வரை தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளதால் இவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பரவியிருக்கும் என்பது தெரியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
அதே போல கடந்த 42 நாட்களாக ஓட்டேரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கடை வீதிகளில் காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஊர்க்காவல் படைவீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருடன் பணியில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவரும் அவரது மனைவியும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொரோனா எங்கே யாருக்கு யாரிடம் இருந்து, எப்படி தொற்றுகிறது என்று அறியும் நிலையை கடந்து பரவி வருவதால் கடை வீதிக்கு செல்வோர் கட்டாயம் முககவசம் அணிந்து வெளியே செல்லுங்கள், வீட்டிற்குள் செல்லும் முன்பாக கையை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்த பின்னர் வீட்டுக்குள் நுழைவது அனைவருக்கும் நலம் பயக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்..!
Comments