காத்திருக்கும் கண்டெய்னர்கள்... கலங்கும் இறக்குமதியாளர்கள்..! அரசு உத்தரவை மதிக்காத ஷிப்பிங் கம்பெனிகள்...
வெளிநாடுகளில் இருந்து தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களுடன் சென்னை துறைமுகத்திற்கு கப்பலில் வந்த ஒரு லட்சம் கண்டெய்னர்கள் முடங்கி கிடப்பதாகவும், அவற்றை அனுப்பிய தனியார் நிறுவனங்கள் இறக்குமதியாளர்களிடம் லட்சக்கணக்கில் சுங்கக் கட்டணம் கேட்டு தொல்லை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் மிகப்பெரிய வர்த்தக துறைமுகம் என்ற பெயரை பெற்றுள்ள சென்னை துறைமுகத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெற்றதால் ஊரடங்கில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
இதனை நம்பி வெளிநாட்டில் இருந்து மூலபொருட்களை இறக்குமதி செய்து தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்து வந்த ஆயிரகணக்கானோர், வெளி நாடுகளில் இருந்து கப்பல் மூலம் ஏராளமான கண்டெய்னர்களில் மூலப்பொருட்களை சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
முழு அடைப்பு காரணமாக இரும்பு மூலப்பொருட்கள், கார் உதிரிபாகங்கள், உள்ளிட்டவற்றை கொண்டு இயங்கும் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதால் , இந்த பொருட்களுடன் வந்த 75 ஆயிரம் கண்டெய்னர்கள் துறைமுகத்திலும், 25 ஆயிரம் கண்டெய்னர்கள் சி.எப்.எஸ் யார்டுகளிலும் வாரக்கணக்கில் காத்துக்கிடப்பதாக கூறப்படுகின்றது.
வழக்கமாக கண்டெய்னர் ஒன்றுக்கு 14 நாட்களுக்கான வாடகை கணக்கிடப்படுகின்றது. அதற்குள்ளாக அந்த கண்டெய்னரில் உள்ள பொருட்களை இறக்கிவிட்டு உரிய நிறுவனத்தின் யார்டுகளுக்கு கண்டெய்னர் சென்று சேர்ந்து விட வேண்டும், அதை விடுத்து 14 நாட்களுக்கு மேல் 20 நாட்கள் வரை கால தாமதம் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு 75 டாலர் வீதமும், 20 முதல் 25 நாட்கள் என்றால் 100 டாலர் வீதமும், 30 நாட்கள் காலதாமதம் என்றால் 150 டாலர் வீதமும், 30 நாட்களுக்கு மேல் என்றால் நாள் ஒன்றுக்கு 200 டாலர் வீதமும் கண்டெய்னருக்கு இறக்குமதியாளர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது வரும்.
காலதாமதத்திற்கு சுங்க முகவர் காரணம் என்றால், அவரது கமிஷனில் இந்த பெருந் தொகை வெட்டாக விழும். தற்போதைய நிலையில் மத்திய சரக்கு மற்றும் கப்பல்துறை அமைச்சகம் ஊரடங்கு நாட்களில் நகர இயலாமல் இருக்கும் கண்டெய்னர்களுக்கு காலதாமத கட்டணம் வசூலிக்க கூடாது என்று அறிவித்திருந்த நிலையில், பெரும்பாலான கண்டய்னர் நிறுவனங்கள் மத்திய அரசின் உத்தரவை ஏற்க மறுத்து, இறக்குமதியாளர்களிடம் லட்சக்கணக்கில் காலதாமதக் கட்டனம் வசூலிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மத்தியரசின் உத்தரவை மீறி காலதாமதகட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களின் கண்டெய்னர்கள் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் கடுமையாக எச்சரித்ததை அடுத்து அத்துறையின் செயலாளர் காலதாமதக் கட்டணம் கேட்டு மிரட்டும் கண்டெய்னர் நிறுவனங்களை அழைத்து நேரடியாக எச்சரித்ததாகவும் தகவல் வெளியானது.
இதனால் இறக்குமதியாளர்கள் காலதாமதகட்டணம் தங்கள் கழுத்தை நெரிக்காது என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். இந்த நிலையில் கண்டெய்னர் நிறுவனங்களை எச்சரித்த துறைச் செயலர் மாற்றம் செய்யப்பட்டதால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துவிட்டு அதற்கு இரு மடங்கு காலதாமத கட்டணம் தங்கள் தலையில் விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
அதே போல சி.எப்.எஸ் யார்டுகளும் கண்டெய்னருக்கு குறிப்பிட்ட தொகையை காலதாமதக் கட்டணமாக கேட்டு தொல்லை செய்வதால், இறக்குமதியாளர்களும் சுங்க முகவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பில் உள்ளனர்.
தற்போது சாதாரணமாக தோன்றும் இந்த பிரச்சனை தொழிற்சாலைகள் இயங்க தொடங்கினால் கடுமையான பாதிப்பை சந்தித்து, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.
கடிவாளம் இல்லாத குதிரை போல தறிகெட்டு ஓடும் கண்டெய்னர் நிறுவனங்களை தக்க சட்டத்தால் கடிவாளம் போட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments