காதல் ரோமியோவிடம் ஏமாந்த அனைவரும் மெத்த படித்தவர்கள்... ! குண்டர் சட்டம் பாய்ந்தது
முகநூல் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை விரித்து 80 பெண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த காதல் ரோமியோ காசி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
யோகா பயிற்சியாளர் வேசம் கட்டிய பாடி பில்டர், குண்டர் தடுப்பு காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காதல் ரோமியோ சுஜி என்கிற காசி முக நூலில் அறிமுகமான சென்னை பெண் மருத்துவரை காதலிப்பதாக ஏமாற்றி பணம் பறித்த புகாரில் கைது செய்யப்பட்டான்.
மேலும் உள்ளூரை சேர்ந்த 24 வயது பட்டதாரி பெண் ஒருவர் காசி 4 வருடமாக காதலித்து ஏமாற்றியதோடு சென்னை உள்பட பல இடங்களுக்கும் அழைத்துச்சென்று தன்னை பயன்படுத்திக் கொண்டதோடு, தன்னிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டதாக நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அடுத்தடுத்து பெண்கள் புகார் அளித்த நிலையில் காசி மற்றும் அவனது நண்பர்களிடம் விசாரித்தவரை, காதல் ரோமியோவாக வலம் வந்த காசி, தன்னை யோகா பயிற்சியாளர், ஜிம் மாஸ்டர் என விதவிதமாக கதை அளந்து விட்டு, முக நூல் , டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் 80 பட்டதாரி பெண்கள் வரை ஏமாற்றி பணம் பறித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காசியிடம் ஏமாந்த பெண்களில் பெரும்பாலானவர்கள் சமூகவலைதளங்களில் பெண்கள் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று காவல்துறையினர் எச்சரிக்கின்றனரோ அதையெல்லாம் சர்வசாதாரணமாக செய்துள்ளனர். பலர் காசியின் பேச்சை நம்பி செல்போனில் வாட்ஸ் அப் வீடியோகாலில் ஆடையின்றி தொடர்பு கொண்டுள்ளனர். இன்னும் பலர் தங்களது புகைபடங்களை அனுப்பி வைத்து அவனது வலையில் சிக்கியுள்ளனர் என்கின்றனர் காவல்துறையினர்.
இதையடுத்து பெண்களுக்கு எதிரான தொடர்குற்றம் புரிந்த காதல் ரோமியோ காசியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சிதலைவர் உத்தரவிட்டுள்ளார். சமூக வலைதளங்களை பயன்படுத்தும் படித்த பெண்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் கையாள வேண்டும், காசியின் உடற்கட்டில் மயங்கி பல பெண்கள் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் வாழ்க்கையை தொலைத்துள்ளனர் என்பது தான் வேதனை.
காசி போன்ற காதல் ரோமியோக்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் பட்சத்தில் இனி எவரும் இது போன்ற செயல்களில் ஈடுபட தயங்குவர். எளிதில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் இது போன்ற குற்றங்கள் தடுக்க இயலாத தொடர்கதையாகி விடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Comments