காய்கனிகள் வாங்குவோர் கவனத்திற்கு .... டெலிவரி உணவா ? உஷார்!
சென்னை மாநகரில் காய்கறி விற்பனையாளர்கள், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர், உணவு டெலிவரி பாய்ஸ் போன்றோருக்கு அண்மையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் காய்கறி, சூப்பர் மார்க்கெட், ஆன்லைன் மூலம் உணவு விற்பனை ஆப்களை பயன்படுத்தும் போது குறைந்தபட்சம், எளிய வழிமுறைகளை கடைபிடித்து, நம்மை நாமே, கொரோனா தொற்றாமல் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து, இப்போது பார்க்கலாம்..
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களாலும், கூட்டமாக நடைபெற்ற நிகழ்வு மூலமாகவும், கொரோனா பரவிய நிலையில், அவர்களோடு நேரடி தொடர்பில் இருந்தவர்கள், இவர்களை சந்தித்தவர்கள் என பலரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகினர்.
இந்த சூழலில், கோயம்பேடு காய்கறிச் சந்தை, பூ மார்க்கெட் வியாபாரிகள், கூலி தொழிலாளி, காய்கனி விற்பனையாளர்கள், திருவள்ளூரில் காய்கறி விற்பனை செய்யும் மூதாட்டி, மந்தைவெளி சூப்பர் மார்க்கெட் குடும்பத்தார் என கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கியுள்ளது.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இடமாக கோயம்பேடு மார்க்கெட் உள்ளதால், சென்னை வாசிகள் மத்தியில் கலக்கம் நிலவுகிறது. இருப்பினும், அதுகுறித்து பேரச்சம் கொள்ள தேவையில்லை என்றும், கொரோனா குறித்த முன்னெச்செரிக்கையுடன் இருந்தாலே, பெருந்தொற்றை விரட்டியடிக்கலாம் என்கின்றனர், சுகாதாரத்துறையினர்...
காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை வாங்க கடைகளுக்குச் சென்றால், தனி மனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கூட்டமாக இருந்தால், காய்கறி கடை முன்பாக, தனி மனித இடைவெளி விட்டு காத்திருந்து காய்கறிகளை வாங்க வேண்டும்.
வீட்டின் அருகில் தள்ளுவண்டிகளில், நடமாடும் கடைகள் மூலம் கொண்டுவரப்படும் காய்கறிகளையும், இடித்து பிடித்து வாங்காமால், தனி மனித இடைவெளியை கடைபிடித்து காய்கறிகளை வாங்க வேண்டும்.
காய்கறிகளை வாங்கிய பின்னர், மஞ்சள் தூள், கல் உப்பு கலந்த, சற்று வெதுவெதுப்பான தண்ணீரில், இரண்டு முதல் மூன்று முறை, நன்றாக கழுவி, பின்னர் அவற்றை சமைக்கவோ, அல்லது ஃபிரிட்ஜிலோ வைக்க வேண்டும்.. ஒருவேளை ஃபிரிட்ஜில் வைத்தால், அதை சமைக்க எடுக்கும்போது, மீண்டும் ஒருமுறைக்கு இருமுறை கழுவிப் பயன்படுத்த வேண்டும்....
குறிப்பாக, கீரைகள், காலிஃபிளவர் போன்ற காய்கறிகளில், கண்ணுக்குத் தெரியாத சின்னஞ்சிரிய புழுக்கள், பூச்சிகள் இருக்க கூடும் என்பதால், அவற்றை சமைக்கும் முன், இளஞ்சூடான தண்ணீரில் நன்றாக கழுவிய பின்னர், அவற்றை சமைக்க வேண்டும்.
கொரோனா காலங்களில் வறுவல்களை கூடுமானவரை தவிர்த்து, ஆவியில், தண்ணீரில் வேகவைக்கும் சமையல் முறையை பின்பற்ற வேண்டும். மேலும் கூடுமான வரை ரொக்கப் பரிவர்த்தனை இல்லாமல் சாதாரண வியாபாரியாக இருந்தாலும் அவர்களிடம் டிஜிட்டல் பேமென்ட் முறை இருக்கிறதா என கேட்டு இருக்கும் பட்சத்தில் அதனை பயன்படுத்த வேண்டும்.
கொரோனா காலக்கட்டங்களில், சமைத்ததை 3 மணி நேரத்திற்குள் சாப்பிட்டு தீர்த்துவிட வேண்டும். முற்பகலில் சமைத்து விட்டு, மாலையில் சாப்பிடக் கூடாது என்றும், சூடாகவே சாப்பிட வேண்டும் என்றும், ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
சென்னையில், உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியின் ஊழியரான இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பேச்சுலராக உள்ளவர்கள், வயது முதிர்ந்தவர்கள், அன்றாட உணவை தயாரித்துக் கொள்ள முடியாதவர்களின் ஒரே நம்பிக்கை, தனியார் உணவு டெலிவரி நிறுவனங்கள் தான்....
வேறுவழியின்றி, டெலிவரி செய்யப்படும், உணவு பார்சல்களை வாங்கு முன், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக, டெலிவரி செய்யும் நபர், சானிடைசர் பயன்படுத்துகிறாரா, முகக்கவசம் அணிந்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அந்த உணவைப் பெறும் வாடிக்கையாளரும், சானிடைசர் அல்லது தண்ணீரால் நன்கு கைகளை கழுவிய பின்னர், முகக்கவசம் அணிந்து கொண்டு அதை வாங்க வேண்டும். பின்னர், அந்த உணவு பொட்டலம் அடங்கிய பையை சுற்றிலும், சானிட்டைசரை தெளித்த பின்னர், மீண்டும் ஒருமுறை நன்றாக சோப் போட்டு கை கழுவிய பின்னர், உணவினை உண்ண வேண்டும். கூடுமானவரை, ஸ்பூனில் சாப்பிடுவதற்கு முயற்சி செய்யுங்கள்...
உணவுக்காக ஆர்டர் கொடுக்கும் போது, கூடுமானவரை, அது டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். டெலிவரி ஊழியர்களிடம் பணம் கொடுத்து, உணவை பெறும் முறையை, கொரோனா அச்சம் அகலும் வரை, முற்றாக தவிர்த்திடல் நலம் பயக்கும்.
இவ்வாறு, எளிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து, நமக்கு, நாமே தனித்திருத்திருந்து, படி தாண்டா எல்லைகளையும், கட்டுப்பாடுகளையும் வரையறுத்துக் கொண்டால், Go கொரோனா Go என விரட்டியடித்துவிடலாம் என்பதே எதார்த்தம்....
Comments