சென்னையில் உணவு டெலிவெரி செய்யும் ஸ்விக்கி ஊழியருக்கு கொரோனா பாதிப்பு
சென்னையில் உணவு டெலிவெரி செய்யும் ஸ்விக்கி நிறுவனத்தின் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் உணவு டெலிவெரி செய்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களை தனிமைபடுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், உணவகங்களில் பார்சல் மூலம் மட்டுமே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வசதிக்காக குறிப்பிட்ட நேரத்தில் உணவு மற்றும் மளிகை பொருட்கள் டோர் டெலிவெரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் வளசரவாக்கத்தை சேர்ந்த ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அந்த ஊழியருக்கு ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த அவரது தந்தையிடம் இருந்து தொற்று பரவியுள்ளது.
தற்போது, கொரோனா பாதித்த ஊழியர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24-ம் தேதி வரை அவர் பணியில் ஈடுபட்டு 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்துள்ளார்.
ஆகையால், தடுப்பு நடவடிக்கையாக, அவர் எந்தெந்த வீடுகளில் உணவு டெலிவெரி செய்தார் என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களை தனிமைபடுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இவ்வாறு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், டோர் டெலிவெரி பணியில் ஈடுபடும் நபர்களும், சம்பந்தபட்ட நிறுவனங்களும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்விக்கி ((Swiggy)) உணவு டெலிவரி நிறுவனம், வாடிக்கையாளர்களை தொடாமல், உணவு டெலிவரி செய்யப்படுவதாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகவே, பணம் பெறப்படுவதாகவும், கூறியிருக்கிறது. கையுறை மற்றும் மாஸ்க் அணிந்துகொண்டே, தங்களது ஊழியர்கள் உணவு டெலிவரி செய்வதாகவும், ஸ்விக்கி தெரிவித்திருக்கிறது. தங்களது ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது, துரதிருஷ்டவசமான ஒன்று என்றும், அவரது சகோதரரும், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நிலையில், அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும், ஸ்விக்கி கூறியிருக்கிறது.
Comments