கோயம்பேட்டில் இரவு 12 மணி முதல் காலை 7 மணி வரை மொத்த வணிகத்துக்கு அனுமதி
சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த வணிகர்கள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 7மணி வரை மட்டுமே காய்கறிகளை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் வணிகர்கள், தொழிலாளர்கள் என 7 பேருக்குக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்துக் கொரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகச் சந்தையில் நள்ளிரவு 12 மணிமுதல் காலை 7 மணி வரை மட்டுமே மொத்தக் காய்கறி விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தைக்குச் சில்லறை வணிகர்கள் இருசக்கர வாகனங்களிலும் ஆட்டோக்களிலும் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெம்போ மற்றும் மினி டெம்போவில் வருபவர்களுக்கு மட்டுமே சந்தைக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும். ஆயிரத்து 650 சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்பட்டு வேறிடங்களில் கடைகள் வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லாரிகளில் கொண்டுவரப்படும் காய்கறிகளை மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை மட்டுமே சந்தைக்குள் இறக்க அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments