சிகிச்சைக்கு வருபவர்களிடம் கொரோனா சோதனையை செய்ய வற்புறுத்தக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
அவசர மருத்துவ உதவி தேடி வரும் நோயாளிகளிடம் முதலில் கொரோனா சோதனை செய்யுமாறு தனியார் மருத்துவமனைகள் வற்புறுத்தக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பல தனியார் மருத்துவமனைகள் தங்களது வழக்கமான நோயாளிகள் உள்பட அனைவருக்கும் இந்த நெருக்கடியை தருவதாக பல புகார்கள் வந்துள்ளன என்று சுகாதார அமைச்சக செயலாளர் பிரீத்தி சூதான் மாநில தலைமைச் செயலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
கொரோனா தொற்று பரவி விடும் என்ற அச்சத்தால் அவசர மருத்துவ சேவைகளான டயாலிசிஸ், ரத்தம் செலுத்துதல், கீமோதெரபி உள்ளிட்டவற்றை அளிக்க பல மருத்துவமனைகள் தயங்குவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நோயாளிகளுக்கு எந்த சிரமும் ஏற்படாத வகையில் தனியார் மருத்துவமனைகள் அந்த சேவைகளை வழங்கும் வகையில் திறந்து செயல்படுவதை கண்காணிக்கவும் மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று இருக்கிறதா என்பதற்கான ஐசிஎம்ஆர் சோதனை நடைமுறைகளை பின்பற்றுவது ஒரு புறம் இருக்க, தனியார் மருத்துவமனைகள் தங்கள் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகளை அளித்து நோயாளிகளை பரிசோதிக்கவேண்டும் என கடித த்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.கருத்தரிப்பு, குழந்தைகள் நலம்,தடுப்பூசிகள், காசநோய், தொழு நோய், கேன்சர், டயாலிசிஸ் தேவைப்படும் சிறுநீரக நோய்கள் உள்ளிட்டவற்றுக்கு எந்த தடையும் இன்று சிகிச்சசைகள் தொடரவேண்டும் என கடந்த 20 ஆம் தேதி உத்தரவிட்டதையும் சுகாதார செயலர் தமது கடிதத்தில் நினைவுபடுத்தி உள்ளார்.
Comments