தமிழ்நாட்டில் 2,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு சென்னையில் கிடுகிடுக்கும் எண்ணிக்கை
தமிழ்நாட்டில், மேலும் 121 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை, 1,128 பேர் குணமடைந்துள்ளனர். இன்று, ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு நிலவரம், நோயாளிகள், குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்டவைத் தொடர்பாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை, செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ஒரே நாளில் 121 பேருக்கு, பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால், தமிழ்நாட்டில், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2,058ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு புதிதாக உறுதியான 121 பேரில், 80 பேர் ஆண்கள் என்றும், பெண்கள் 41 பேர் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, தீவிர உயர் சிகிச்சைக்குப் பின், 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், கொரோனா பாதிப்பிலிருந்து, பூரண நலம் பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, 1,128 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அடுத்த 14 நாட்களுக்கு, வீட்டில், தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பார்கள்.
சென்னையில், தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த 68 வயதான முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம், தமிழ்நாட்டில், இதுவரை, கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 25ஆக அதிகரித்துள்ளது.
30 ஆயிரத்து 692 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாகவும், கொரோனா அறிகுறி இல்லையென்றாலும், தொற்றுநோய் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வழியே பயணித்தவர்கள் என்ற அடிப்படையில், 47 பேர் அரசின் தனிமை முகாம்களில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில், சென்னையில், ஒரே நாளில், 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில், இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 673ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 12 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 2 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட 32 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
செங்கல்பட்டு மாவட்டத்தில், பிறந்த 5 நாட்களே ஆன குழந்தைக்கும், ஒரு வயது குழந்தைக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில், பிறந்த 7 மாதமே ஆன குழந்தைக்கும், ஒரு வயது குழந்தைக்கும், 2 வயது குழந்தைக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
ஒரே நாளில் 10 வயதுக்குப்பட்ட, 8 குழந்தைகளுக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில், 12 வயதுக்கு உட்பட்ட 121 சிறுவர், சிறுமிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
No new COVID19 cases reported in 32 districts of the state today. The 121 new COVID19 positive cases reported today are from Chengalpattu (12), Chennai(103), Kallakurichi(3), Kancheepuram(1), Namakkal (2) districts: Tamil Nadu Health Department https://t.co/30hAyWKCpR pic.twitter.com/AbXuF0tOHD
— ANI (@ANI) April 28, 2020
Comments