டவுண் பஸ்ஸான 102 ஆம்புலன்ஸ்...!டயாலிசிஸ் நோயாளிகள் பட்டினி
தென்காசியில் இருந்து நெல்லைக்கு டயாலிஸிஸ் நோயாளிகளை தனி நபர் இடைவேளி இல்லாமல் டவுண் பஸ்சில் ஏற்றிசெல்வது போல 102 ஆம்புலன்சில் நெருக்கியடித்து ஏற்றிச்சென்று நாள் முழுவதும் பட்டினி போட்டதாக புகார் எழுந்துள்ளது
தென்காசியில் இருந்து நெல்லைக்கு 102 ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளிகளை நெருக்கி அடித்து ஏற்றி செல்வதை வழக்கமாக வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போக்குவரத்து வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் மற்றும் டயாலிசிஸ் நோயாளிகளை தென்காசியில் இருந்து நெல்லையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தாய் சேய் நல ஊர்த்தியான 102 அம்புலன்ஸ் தான் தற்போது டவுண் பஸ் போல இயக்கப்பட்டு வருகின்றது.
கொரோனா குறித்த முன் எச்சரிக்கை ஏதும் இல்லாமல் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் என 40 பேரையும் ஒரே ஆம்புலன்ஸில் நெருக்கி அடித்து ஏற்றிச்சென்று அதே நெரிசலுடன் மாலையில் திரும்புவதாக கூறப்படுகின்றது.
டயாலிஸிஸ் செய்வதற்காக காலை 6 மணிக்கு அழைத்து வரப்படும் நோயாளிகளுக்கு 11 மணிக்கு சிகிச்சை முடிந்தாலும் மீண்டும் மாலை 6 மணிக்கு தான் அழைத்து செல்ல 102 ஆம்புலன்ஸ் வருவதாகவும், முன்பெல்லாம் வாரத்திற்கு 2 முறை டயலிசிஸ் செய்த நிலையில், இந்த வாகனத்தில் அடைத்து கொண்டு செல்லப்படுவதால் தற்போது 3 முறை டயலிஸிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் நாள் முழுவதும் பட்டினியாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்
இதில் பயணிக்கும் கர்ப்பிணி மற்றும் அவர்களது குடும்பத்தாரிடமும் தனியாக பணம் வசூல் செய்வதாகவும் புகார் கூறப்படுகின்றது. நோயாளிகள் மட்டுமல்லாமல் உறவினர்களையும் பணம் வாங்கிக் கொண்டு அழைத்து வரும் இந்த 102 அம்புலன்ஸ் ஓட்டுனரால் தினமும் இதில் பயணிக்கும் நோயாளிகள் கடும் அவதியுறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதே நேரத்தில் தென்காசியில் இருந்து நோயாளிகள் வசதிக்காக கூடுதல் ஆம்புலன்சுகளை இயக்கினால் இது போன்ற குற்றச்சாட்டுக்களையும் நோய்பரவலையும் தவிர்க்கலாம்.
Comments