முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று மீண்டும் ஆலோசனை...

0 8335

மே மூன்றாம் தேதிக்குப் பிறகு ஊரடங்கைத் தளர்த்துவதா நீட்டிப்பதா என்பது குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். 

கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. டெல்லியில் மே 16ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஊரடங்கை மே 3ந் தேதிக்கு பிறகும் தொடருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகம், குஜராத், ஆந்திரா, அரியானா, கர்நாடகம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றும் என அறிவித்துள்ளன.

பிரதமருடனான ஆலோசனைக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்ய கேரளா, அசாம், பீகார் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் மே 7 வரை ஊரடங்கை நீட்டித்து அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார். 40 நாட்கள் முடிவில் ஊரடங்கு தளர்த்தப்படுமா என்பது குறித்து இந்த ஆலோசனைக்குப் பின்னர் பிரதமர் மோடி முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளிலும் மதத்தின் பெயராலோ திருமணம், திருவிழாக்கள் போன்றவற்றாலோ மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை நீடிக்க வேண்டும் என்று பெரும்பாலான மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. திரையரங்குகள் ,பொழுதுபோக்கு பூங்காக்கள், மால்கள், பள்ளி- கல்லூரிகள் போன்றவை மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்த தினக்கூலித் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல வாகனப் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என்றும் சமூக -தனிநபர் இடைவெளி கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மே 3ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். டெல்லி, மகாராஷ்ட்ரா போன்ற பாதிப்பு அதிகமுடைய பகுதிகள் தவிர்த்து ஊரடங்கு ஓரளவுக்குத் தளர்த்தப்படும் என்றே நம்பிக்கை எழுந்துள்ளது. ரயில்கள், பேருந்துகள், விமானங்கள் இயக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments