உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 30 லட்சத்தை நெருங்குகிறது
உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா நோய் தொற்று படிப்படியாக உச்சக்கட்டத்தை அடைந்து வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் நாள்தோறும் பலமடங்கு அதிகரித்தபடி உள்ளது.
கடந்த 2ம் தேதியன்று உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தையும், 15ம் தேதி 20 லட்சத்தையும் கடந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கி வருகிறது.
இந்திய நேரம் மதியம் 3.30 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் 29 லட்சத்து 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டியிருந்தது.
அமெரிக்காவுக்கு அடுத்து ஸ்பெயினில் 2 லட்சத்து 23 ஆயிரம் பேரும், இத்தாலியில் ஒரு லட்சத்து 95 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர். பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், துருக்கி ஆகிய நாடுகளிலும் கொரோனா நோயால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் உலகம் முழுவதும் கொரோனா நோயால் பலியானோரின் எண்ணிக்கையும் 2 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 2ம் தேதி 50 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை, 24 நாள்களில் மேலும் ஒன்றரை லட்சம் பேர் பலியானதால் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
உலக அளவில் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ள நாடுகளில், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. இதில் முதலிடத்திலுள்ள அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 54 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் 18 லட்சத்து 90 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், அவர்களில் 57 ஆயிரம் பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளன.
இதேபோல் மருத்துவமனைகளில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் 8 லட்சத்து 38 ஆயிரம் குணமடைந்துள்ளனர்
Comments