எலி வீடுகளான திரையரங்குகள்..! சூர்யா முடிவுக்கு இதுவும் காரணம்

0 19118

திரைப்படங்களை தியேட்டரில் வெளியிடுவதா? டிஜிட்டல் தளங்களில் வெளியிடுவதா ? என்று திரையரங்கு உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் மோதிக் கொண்டிருக்கும் சூழலில் சென்னையில் பிரபல மால் திரையரங்குகளில் புகுந்த எலிகள் இருக்கைகளையும், சவுண்ட் சிஸ்டங்களையும் கடித்து கந்தலாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில் திரையரங்குகளுக்கு பூட்டுபோட்டு 40 தினங்கள் கடந்துவிட்ட நிலையில் மீண்டும் எப்போது மீண்டு செயல்பட தொடங்கும் என்பது தெரியாமல் திரையரங்கு உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர்.

ஒரு சில திரையரங்குகளை வைத்துள்ள தியேட்டர் அதிபர்கள் தங்கள் பணியாளர்கள் மூலம் திரையரங்குகளை முழுமையாக கிருமி நாசினி தெளித்து, வாரத்திற்கு ஒரு முறையாவது ஏதாவது படத்தை திரையிட்டு பரீட்சார்த்த முறையில் வெளியிட்டு பார்த்துக் கொள்வதாக தெரிவித்தனர்

ஆனால் சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் மால்களில் திரையரங்குகளை நடத்திவந்த தனியார் நிறுவனங்கள் தங்கள் திரையரங்குகளை திறந்து பராமரிக்க இயலாத நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சென்னையில் பிரபலமான மாலில் உள்ள திரையரங்குகளில் எலியார் புகுந்து வேட்டை நடத்தி உள்ளார். பார்வையாளர் இருக்கை தொடங்கி, அங்குள்ள விலை உயர்ந்த சவுண்டு சிஸ்டங்களை எல்லாம் எலிகள் வெட்டி கந்தலாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் தான் திரையரங்குகள் முழுமையான செயல்பட்டிற்கு வர குறைந்தது 3 மாதங்களாவது பிடிக்கும் என்ற நிலையில் படம் தயாரிக்க வாங்கிய கடனுக்கு எகிறும் வட்டியை கணக்கில் கொண்டு தான் சூர்யா தனது பொன்மகள் வந்தாள் படத்தை, நேரடியாக டிஜிட்டலில் விற்றுள்ளார் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். அந்த படம் வருகிற மே 1 ந்தேதி ஒடிடியில் வெளியிடப்பட உள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

சூர்யாவை பின்பற்றி சித்தார்த்தின் புதிய படம், யோகிபாபுவின் காக்டெயில் உள்ளிட்ட 8 படங்கள் நேரடியாக ஓடிடியில் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தயாரிப்பாளர்களின் இந்த முடிவுக்கு திருப்பூர் சுப்பிரமணியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் படத்தை வெளியிடுவது தொடர்பாக இப்படி மோதிக் கொண்டிருக்க, தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அரசே உத்தரவிட்டாலும், உடனடியாக புதிய படங்களை திரையிடுவதற்கான சுமூகமான சூழல் அங்கு இல்லை என்பதே கசப்பான உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments