உலகில் கொரோனா பலி 2 லட்சத்தை நெருங்கியது
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.
மனித குலத்துக்கு புதிய எதிரியாக உருவெடுத்துள்ள கொரோனா நோய்க்கு எதிராக உலகமே போராடி வருகிறது.
நாளுக்கு நாள் ஆயிரகணக்கானோர் பாதித்து வருவதாலும், பலியாகி வருகின்றனர். இதனால் உலக அளவில் பலி எண்ணிக்கை இந்திய நேரப்படி மதியம் 2 மணி நிலவரப்படி 2 லட்சத்தை நெருங்கியிருந்தது.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் 52 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதற்கடுத்து இத்தாலியில் சுமார் 25 ஆயிரம் பேரும், ஸ்பெயினில் 22 ஆயிரத்து 500 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதில் வல்லரசான அமெரிக்காவில் அதிகமான எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்து ஸ்பெயினில் 2 லட்சத்து 19 ஆயிரம் பேரும், இத்தாலியில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சில் ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேருக்கும், ஜெர்மனியில் ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேருக்கும் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு 18 லட்சத்து 30 ஆயிரம் பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதில் சுமார் 59 ஆயிரம் பேரின் உடல்நிலை கவலையளிக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் மருத்துவ சிகிச்சையில் உலகம் முழுவதும் சுமார் 8 லட்சம் பேர் குணமடைந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments