மிரட்டும் கொரோனா- மிரளும் மக்கள் 2,00,000-ஐ நெருங்குகிறது உலகளவில் உயிரிழப்பு
உலக அளவில், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டும் நிலையில் அதி வேகமாக உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில் மட்டும் உயிரிழப்பு, 52 ஆயிரத்தை தாண்டி விட்டது.
கண்ணுக்கு தெரியாத கொரோனா கிருமி, உலக நாடுகளை எல்லாம் ஆட்டி படைத்து வருகிறது. உயிர்பலிகளும், பாதிப்புகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறதே, தவிர, குறைந்த பாடில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு நாடுகளும் திணறி வருகின்றன.
அமெரிக்காவை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் பலி ஆனதால், உயிரிழப்பு 52 ஆயிரத்தை தாண்டி விட்டது. அங்கு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 24 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் உயிரிழப்பு 26 ஆயிரத்தை நெருங்ப, பாதிப்பு ஒரு லட்சத்து 92 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஸ்பெயினை பொறுத்தவரை, ஒரே நாளில் 367 பேரை கொரோனா காவு வாங்கியதால், உயிரிழப்பு 22 ஆயிரத்து 524 ஆக உயர்ந்தது.
பிரான்ஸில் பலி எண்ணிக்கை 22 ஆயிரத்துக்கும் அதிகமான நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 768 பேர் கொரோனாவுக்கு இரை ஆனதால், உயிரிழப்பு 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பெல்ஜியத்தில் பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்க, ஈரானில் 5 ஆயிரத்து 500 க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவை பொறுத்தவரை, 4 ஆயிரத்து 632 பேர், கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.நெதர்லாந்தில் உயிரிழப்பு 4 ஆயிரத்து 300 ஐ நெருங்க, பிரேசிலில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 600 ஐ தாண்டி விட்டது.
துருக்கியில் 2 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஸ்வீடனில் 2 ஆயிரத்து 100 க்கும் அதிகமானோர் பலியாகி விட்டனர்.கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலும் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இதனிடையே, உலகம் முழுவதும் 7 லட்சத்து 98 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். மற்றொரு பக்கம் சுமார் 58 ஆயிரத்து 500 பேர், கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே, கொரோனா உயிரிழப்பு, மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Comments