இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியது
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியதை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்கள் ஒரு மாத நோன்பைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவின் கொடிய கரங்கள் நீண்டிருப்பதால் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதற்கு இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவும் விதிவிலக்கில்லை. ரமலான் மாதத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் தொழுகை நடத்திய பெரிய மசூதி தற்போது ஒன்றிரண்டு பணியாளர்களுடன் காணப்படுகிறது.
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள் என மும்மதத்தினருக்கும் புனித தலமாக விளங்கும் பாலஸ்தீனத்தில் உள்ள அல் அக்ஸா மசூதியில் ஏராளமானோர் பங்கேற்ற ரமலான் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.
அமெரிக்காவில் நியூயார்க் நகரையொட்டிய பரபரப்பான பகுதியான மன்ஹாட்டனில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக எந்த வாகன சப்தமும் இல்லாததால் அங்கு சொல்லப்பட்ட பாங்கு எனப்படும் அழைப்புச் சப்தம் பல பகுதிகளிலும் எதிரொலித்தது.
மும்பையில் ரமலான் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீசார் செய்திருந்தனர். ஊர்வலமாகச் சென்ற ஏராளமான போலீசாருக்கு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு கரவொலி எழுப்பி வாழ்த்துத் தெரிவித்தனர். சாலையில் அணிவகுத்துச் சென்ற போலீசாருக்கு இஸ்லாமிய இளைஞர் ஒருவர் பூத்தூவி வாழ்த்துத் தெரிவித்தார்.
Comments