முக நூல் ரோமியோவிடம் பணத்தை இழந்த பெண் மருத்துவர் .! காதல் களவானிக்கு காப்பு
முக நூலில் தொழில் அதிபர் என கோட் சூட்டுடன் புகைப்படம் வெளியிட்டு சென்னை பெண் மருத்துவர் உள்ளிட்ட ஏராளமான பெண்களை காதல் வலையில் வீழ்த்தி லட்சகணக்கில் பணம் பறித்த இறைச்சி வியாபாரியின் மகனை காவல்துறையினர் கைது செய்தனர். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு ஆதரவாக பொங்கியவர் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
ஒரு கையில் மதுபாட்டிலை வைத்து மது அருந்திக் கொண்டும், மற்றொரு கையால் காரை ஓட்டிக்கோண்டே சோஃபியாவை துணைக்கு அழைக்கும் சோக்காலி ரோமியோ காசி இவர் தான்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த 26 வயது இளைஞரான காசி பொறுப்பான வேலை எதற்கும் செல்லாத ஒரு ஊர் சுற்றி என்று கூறப்படுகின்றது.
தந்தை இறைச்சி வியாபாரம் செய்து வருவதால் அவருடைய உழைப்பில் உடலை வளர்த்து வந்த காசி, முக நுலில் போலியான கணக்குகளை தொடங்கி அதில் தன்னை, சமூக ஆர்வலர் என்றும் தொழில் அதிபர் என்றும் கூறிக்கொண்டு, கோட் சூட் அணிந்த புகைபடங்களை வெளியிட்டார்.
ஜீன்ஸ் பேண்ட், 100 ரூபாய் கூலிங்கிளாசுடன் செதுக்கி விட்ட தாடியுடன் தன்னை ஒரு மாடல் போல போட்டோ ஷாப் செய்து காசி முக நூலில் வெளியிட்ட புகைபடங்களை நம்பி இவருக்கு லைக்குகளுடன் தங்களது லைப்பையும் அள்ளிக்கொடுத்த பெண்கள் ஏராளம் என்று கூறப்படுகின்றது.
பாடிபில்டர் போல இவர் பதிவிட்ட புகைப்படங்களை பார்த்து இவரை ஆணழகனென்று நம்பி பேச்சுக்கொடுத்து பணத்தையும், மனத்தையும் பறிகொடுத்த உள்ளூர் அழகிகள் பட்டியல் நீள்கிறது.
அந்த வகையில் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரை தொழில் அதிபர் என ஏமாற்றி காதல்வலையில் விழவைத்த ரோமியோ காசி, அவரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை பெற்று சொந்தமாக கார் உள்ளிட்ட பலவற்றை வாங்கிக் கொண்டு புது புது காதலிகளுடன் காரில் வலம் வந்துள்ளார்.
எந்த பெண்ணுடன் பழகினாலும் தான் ஒரு மன்மதன் என்பதை மற்ற பெண்களுக்கு காட்டுவதற்காக அவர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்று செல்பி எடுத்து தனது போலியான முக நூல் கணக்குகளில் பதிவிடுவது காசியின் வழக்கம்.
அந்தவகையில் அந்த பெண் மருத்துவருடன் நெருக்கமாக இருந்த புகைபடங்களையும் முக நூலில் பதிவிட்டு தனக்கு தனே தகுந்த ஆதாரத்துடன் குழிவெட்டி போலீசில் சிக்கிக் கொண்டார் மன்மதன் காசி .
தனது புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன அந்த பெண் மருத்துவர், அளித்த புகாரின் பேரில் காதல் மன்னனாக வலம் வந்த காசிக்கு கையில் காப்பு மாட்டி சிறையில் அடைத்து இருக்கின்றது காவல்துறை.
மேலும் காசியிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்து ஏராளமான பெண்களுடன் அவர் தனிமையில் இருந்த , புகைப்படங்களையும், வீடியோக்களையும் கைப்பற்றி உள்ளனர்.
பல பெண்களிடம் தனிமையில் இருந்த போது எடுத்த புகைப்படங்களை காட்டி மிரட்டி பணம் பெற்றதாக கூறப்படும் நிலையில் இவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இப்படி பல பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடிய இந்த தீராத விளையாட்டு பிள்ளைதான் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய பாலியல் கொடூரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டவன் என்றும் சுட்டிக்கட்டுகின்றனர் காவல்துறையினர்.
முன் பின் தெரியாதவர் முக நூலில் குறிப்பிடும் தகவலை, பெண்கள் உண்மை என நம்பி அவரிடம் முதலில் மனதை பறிகொடுத்து, அவர்களின் வார்த்தையை நம்பி பணத்தையும், வக்கிர செயலால் மானத்தையும் பறி கொடுக்கும் நிலை தொடர்வது வேதனைக்குறியது.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல பல நிகழ்வுகள் அரங்கேறினாலும், விழிப்புணர்வு இல்லாமல் உருவ அழகை பார்த்து ஏமாறும் அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
Comments