தற்சார்புடன் திகழ வேண்டியதைக் கொரோனா கற்பித்துள்ளது - பிரதமர் மோடி
தற்சார்பாக இருக்க வேண்டியதன் தேவையைக் கொரோனா வைரஸ் கற்பித்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பஞ்சாயத்து ராஜ் நாளையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், உலகளாவிய கொரோனா வைரஸ் பரவல், தற்சார்புடன் திகழ வேண்டும் என்கிற மிகப் பெரிய பாடத்தை மனிதர்களுக்கு கற்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார். மாநிலங்கள், மாவட்டங்களைவிட ஊராட்சிகள் தற்சார்புடன் திகழ்வது முதன்மையானது என்றும், நாடு முழுவதுமே தற்சார்புள்ளதாக ஆக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் என்னும் பெயரில் இதுவரை இல்லாத சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகவும், இது மனித குலத்துக்கே அச்சுறுத்தலாக உள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இதை எதிர்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இ கிராம் சுவராஜ் என்கிற இணையத்தளத்தையும், செல்பேசிச் செயலியையும் மோடி அறிமுகப்படுத்தினார்.
Comments