இரு மடங்கு லாபத்தில் விற்கப்பட்ட பொன்மகள்..! புது ரூட்டில் சூர்யா
நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடித்து இன்னும் திரைக்கே வராத "பொன்மகள் வந்தாள்" என்ற புதிய திரைப்படத்தை நேரடியாக டிஜிட்டல் மார்க்கெட்டில் இருமடங்கு விலைக்கு விற்றதன் மூலம், தமிழ்த் திரை உலகில் சிறிய பட்ஜெட் படங்களுக்கு சூர்யா புது ரூட்டு போட்டு கொடுத்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவை வைத்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தின் இறுதிகட்டப்பணிகள் முழுவதுமாக முடிவடைந்து மார்ச் 28 ந்தேதி திரையிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கு மற்றும் சிட்டியில் அதிக திரையரங்குகளை கொண்ட மால்கள் மூடப்பட்டதால் படத்தை வெளியிடமுடியவில்லை..!
இந்த நிலையில் தனது டூடி எண்டர்டெயின்மெண்ட் படங்களை திரையரங்கில் வெளியிட்ட பின் டிஜிட்டல் பிளாட்பார்மில் அமேசானுக்கு விற்றுவந்த சூர்யா, முதல் முறையாக திரையரங்கிற்கே வராத பொன்மகள் வந்தாள் படத்தை அமேசானுக்கு விற்றுவிட்டதாக கூறப்படுகின்றது. சுமார் நான்கரை கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட பொன்மகள் வந்தாள் படத்தை 9 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் பிரைம் வாங்கி உள்ளதாக சொல்லப்படுகின்றது. படத்தின் பட்ஜெட்டை விட இரு மடங்கு விலைக்கு டிஜிட்டலில் படம் விற்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகின்றது.
திரைஉலகில் இத்தனை காலமும் தங்கள் குடும்ப வளர்சிக்கு உதவிய விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களை பற்றி சிந்திக்காமல் சூர்யா துரோகம் இளைத்து விட்டதாக ஒரு தரப்பு கொதித்துக் கொண்டிருக்க, சிறுபட தயாரிப்பாளர்கள் சூர்யாவை பாராட்டி வருகின்றனர்.
வட்டிக்கு பணம் வாங்கி தயாரித்து முடித்த தங்கள் படத்தை வெளியிட தியேட்டர் கிடைக்கவில்லை என்று புலம்பிய நிலையை மாற்றி, தயாரிப்பாளர்களுக்கு புதிய வியாபார பாதையை சூர்யா அமைத்துக் கொடுத்துள்ளதாக தயாரிப்பாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்
சினிமா வணிகம் சார்ந்தது. தற்போதைய நிலையில் திரையரங்குகள் முழு செயல்பட்டிற்கு வர இன்னும் இரு மாதங்கள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது. தயாரிப்பாளருக்கு போட்ட முதல் கைக்கு வர வேண்டுமானால் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற புதுப் புது பாதைகளை வகுத்துக் கொண்டால் மட்டுமே திரை உலகில் மறுமலர்ச்சி ஏற்படும் என்பதை சத்தமில்லாமல் தனது சொந்த படம் மூலம் நிகழ்த்திக் காட்டியுள்ளார் சூர்யா..!
Comments