அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2300 பேர் பலி
அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததையடுத்து, அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சீனாவின் வூகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 300க்கும் அதிகமானோர் மரணித்ததால், அங்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 15 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் உணவுப் பொருட்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க உணவு நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. முன்னதாக 11 ஆயிரத்து 100 ஆக இருந்த எண்ணிக்கை நேற்று 22 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றினால் வரும் 30ம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை முடிவுக்குக் கொண்டு வர இருப்பதாக அதிபர் சிரில் ராமபோசா தெரிவித்துள்ளார். எனவே நடப்பு மாதம் முடிந்த பின்னர் ஊரடங்கு தளர்வு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் வைரஸ் தொற்று உள்ளவர்களைக் கண்டறியும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த எண்ணிக்கையை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹென்காக் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரில் பாதி எண்ணிக்கை ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.ரஷ்யாவில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு வரை தங்களால் இயல்பு நிலைக்குத் திரும்ப இயலாது என ஸ்காட்லாந்து மூத்த அமைச்சர் நிக்கோலா கூறியுள்ளார்.மலேசியாவில் ரமலானை முன்னிட்டு ஸகர் எனப்படும் அதிகாலை உணவை பொது இடங்களில் சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments