கொரோனா நிதி அள்ளி கொடுத்த கில்லி யார்...? விஜய் ரசிகர் கொலை
அரசுக்கு கொரோனா நிவாரண நிதி அதிகம் கொடுத்த நடிகர்கள் யார் என்ற விவாதம் வாக்குவாதமாகி வன்முறையானதால் விஜய்ரசிகர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா ஊரடங்கால் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில், நடிகர் ரஜினி, அஜீத், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரை உலகினர் லட்சங்களை அள்ளிக்கொடுத்து வருகிருகின்றனர்.யாருடைய அபிமான நடிகர் அதிகம் கொடுத்தது என்று இதுவரை சமூகவலைதளங்களில் சண்டையிட்டு வந்த ரசிகர்கள், வீதிக்கு வந்து மோதிக்கொள்ள தொடங்கி இருக்கின்றனர். அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எழுந்த வாக்குவாதம் விபரீத கொலையில் முடிந்திருக்கிறது.
மரக்காணம் சந்திகாப்பன் கோயில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளியான, யுவராஜ், நடிகர் விஜய்யின் வெறித்தனமான ரசிகர். இவரது நண்பரான 22 வயது தினேஷ் பாபு, தீவிர ரஜினி ரசிகர். நண்பர்கள் இருவரும் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில் திருட்டு தனமாக விற்கப்பட்ட மதுப்பாட்டிலை வாங்கிவந்து கூட்டாக அமர்ந்து மது அருந்திய நண்பர்கள் இருவரும், அரசுக்கு கொரோனா நிதி அதிகம் கொடுத்த நடிகர்கள் யார் என்று விவாதிக்க, விஜய்யா ? ரஜினியா ? என்று வாக்குவாதம் வலுத்தது.
முதலில் கொரோனா நிதி கொடுத்தது ரஜினி என தினேஷ் பாபு முறுக்க, அதிகம் கொடுத்தது விஜய்தான் என்று யுவராஜ் கொதிக்க வாக்குவாதம் கைகலப்பானது. ஆத்திரத்தில் தினேஷ்பாபு , யுவராஜை அடித்து கீழே பிடித்து தள்ளியுள்ளார். சாலையில் கிடந்த கல் மீது விழுந்த யுவராஜ் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் பரிதாபமாக பலியானார். யுவராஜ் சடலத்தை கைப்பற்றி பிணகூறாய்வுக்காக அனுப்பி வைத்த போலீசார் குடிபோதையில் கூட்டாளியை கொன்ற தினேஷ் பாபுவை கைது செய்தனர்.
விஜய்க்காக குரல் கொடுத்த கூலித்தொழிலாளி யுவராஜ் சடலமான நிலையில், ரஜினிக்காக வாய்ஸ் கொடுத்த இளைஞர் தினேஷ் பாபு கொலை வழக்கில் சிக்கி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
கொரோனா பரவலை தடுக்க விழித்திரு, தனித்திரு, வீட்டிலிரு என்பதை பின்பற்றாமல் குடிபோதையில் மூழ்கி சண்டையிட்டுக் கொண்டால் என்னமாதிரியான விபரீதம் அரங்கேறும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!
Comments