இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,700 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய நலவாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 229 பேருக்குக் கொரோனா உள்ளது கண்டறியப்பட்டதாகவும் இத்துடன் சேர்த்துப் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் நாலாயிரத்து 325 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழந்ததாகவும் இத்துடன் சேர்த்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 686ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 16 ஆயிரத்து 689 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதிக அளவாக மகாராஷ்டிர மாநிலத்தில் ஐயாயிரத்து 652 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 269 பேர் உயிரிழந்தனர்.
குஜராத்தில் இரண்டாயிரத்து 407 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 103 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் இரண்டாயிரத்து 248 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 48 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தானில் ஆயிரத்து 890 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 27 பேர் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேசத்தில் ஆயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 81பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் ஆயிரத்து 683 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 20 பேர் உயிரிழந்தனர்.
12 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாகப் புதிதாக ஒருவர் கூடக் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என நலவாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இதேபோல 23 மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக ஒருவர் கூடக் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மார்ச் 23ஆம் தேதி 14 ஆயிரத்து 915 கொரோனா சோதனைகள் தான் செய்திருந்ததாகவும், ஏப்ரல் 22 ஆம் தேதி 5 லட்சத்துக்கு மேற்பட்ட சோதனைகளைச் செய்துள்ளதாகவும் நலவாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
Comments