கொரோனோ, நோயாளிகளின் ரத்தத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் அச்சம்
அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனா நோயாளிகள் சிலரின் சிறுநீரகம், நுரையீரல், மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளில் ரத்த கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
நியூயார்க் மவுண்ட் சினாய் மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த, ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் பல்வேறு உறுப்புகளில் ரத்தம் கெட்டியாகி, கட்டியாவதை கண்டறிந்துள்ளனர்.
டயாலிசிஸின்போது கதீட்டர் குழாய்களில் ரத்தக் கட்டிகளால் அடைப்பு ஏற்பட்டதை சிறுநீரகவியல் மருத்துவர்கள் கவனித்துள்ளனர்.
இதேபோல, சில நோயாளிகளின் நுரையீரலில் சில பகுதிகளில் ரத்தம் இல்லாமல் இருந்ததை, நுரையீரல் தொடர்பான மருத்துவ வல்லுநர்கள் கவனித்துள்ளனர்.
மூளைகளில் ரத்த கட்டிகளால் ஏற்படும் அடைப்பு இளம் நோயாளிகளுக்கும் ஏற்படுவதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது, கொரோனா வைரஸ், நோயாளிகளின் உடலில் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்த எச்சரிக்கை மணியாக இருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.
எனவே, கோவிட்-19 என்பது நுரையீரலையும் தாண்டி பாதிப்புகளை ஏற்படுத்தும் நோயாக இருக்கக் கூடும் என மருத்துவர்கள் கருதுகின்றனர் என மவுன்ட் சினாய் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் அடிப்படையில் கெட்டியாகும் ரத்தத்தை மெல்லிதாக்கும் மருந்தை பயன்படுத்தும் சிகிச்சை முறையை உருவாக்கி வருகின்றனர்.
Comments