இந்தியாவில் கொரோனா பாதிப்பு: 20 ஆயிரத்தை நெருங்கியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் ஆயிரத்து 383 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய்க்கு எதிராக தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் நோய் தொற்று பரவி வருகிறது. இதனால் பலி எண்ணிக்கையும், பாதிப்பு எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்தபடியே உள்ளது.இந்தியாவில் கொரோனா நோய்க்கு 24 மணி நேரத்தில் ஆயிரத்து 383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால் நாட்டில் கொரோனா நோய்க்கு பாதித்தோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 984ஆக அதிகரித்து, 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதேபோல் பலியானோரின் எண்ணிக்கையும் 640ஆக உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழும் மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்து குஜராத் மாநிலத்தில் கொரோனா அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தில் 2 ஆயிரத்து 178 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கடுத்து டெல்லியில் கொரோனாவுக்கு 2 ஆயிரத்து 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு கொரோனா நோயிலிருந்து இதுவரை 3 ஆயிரத்து 870 பேர் குணமடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 722 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுதவிர்த்து நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்து 474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments