எளிய மனிதர்களின் பெரிய சேவை -பிரதமர் பாராட்டு
ஊரடங்கு காலத்தில் மக்களுக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள், சிறுவியாபாரிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
21 நாட்கள் ஊரடங்கு மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டதையடுத்து, மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மளிகை, காய்கறி, பால், பார்சல் மட்டும் தரும் உணவகங்கள், குடிநீர் விநியோகம், பெட்ரோல் நிலையங்கள் போன்றவை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டான சூழலில் நாடே வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் நிலையில் மக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதில் சிறுவியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களின் மனித நேய சேவையை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
இந்த கடைக்காரர்களும் வியாபாரிகளும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பொருட்களை விற்பனை செய்கின்றனர். அவர்கள் அப்படிச் செய்யாமலிருந்தால் என்ன ஆகும் என்று எண்ணிப்பாருங்கள் என்று மோடி தெரிவித்துள்ளார்.
நாடு அவர்களின் சேவையை என்றைக்கும் நினைவில் வைத்திருக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். வரும் காலங்களிலும் அனைத்துக் கடைகளிலும் சமூக, தனி நபர் இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டியது கட்டாயமாகிறது என்றும் மோடி தெரிவித்தார்.
முன்னதாக டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட மோடி கோவிட் 19 நோய்க்கு மதமோ, சாதியோ, வர்ணமோ, இனமோ, மொழியோ ,எல்லையோ கிடையாது எனக் கூறியுள்ளார்.
அது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றும், நாம் சகோதரத்துவ உணர்வுடன் ஒற்றுமையாக இருந்து, கொரோனாவை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments