இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 1334 பேருக்கு கொரோனா
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1334 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 712 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சம் அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா நிலவரம் குறித்த தகவல்களை டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லவ் அகர்வால் வெளியிட்டார். இன்று காலை நிலவரப்படி மொத்தம் 15 ஆயிரத்து 712 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். இறப்பு எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதுவரை 2 ஆயிரத்து 231 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்து 27 பேர் உயிரிழந்ததாக கூறிய லவ் அக்ரவால், புதுச்சேரிக்குட்பட்ட மாஹி மற்றும் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் கடந்த 28 நாட்களாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார். இந்த 2 இடங்கள் தவிர்த்து மேலும் 54 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிய தொற்று எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்று குறிப்பிட்ட அகர்வால், நாடு முழுவதும் கொரோனாவுக்கு என்றே 755 மருத்துவமனைகளும் 1389 சுகாதார மையங்களும் செயல்படுவதாக கூறினார்.
இதனிடையே நாடு முழுவதும் இதுவரை 3 லட்சத்து 86 ஆயிரத்து 791 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை விஞ்ஞானி ராமன் கங்கா கேத்கர் தெரிவித்தார்.
Comments