47 மாவட்டங்களில் 14 நாள்களில் ஒருவருக்கு கூட கொரோனா உறுதிசெய்யப்படவில்லை
மத்திய, மாநில அரசுகளின் தீவிர தடுப்பு நடவடிக்கைகளால் 23 மாநிலங்களிலுள்ள 47 மாவட்டங்களில் கடந்த 14 நாள்களில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வால் (Health ministry joint secretary), மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்து இருப்பதாகவும், புதுச்சேரியின் மாஹே, கர்நாடகத்தின் குடகு மாவட்டங்களில் 14 நாள்களில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதேபோல் நாட்டின் 23 மாநிலங்களில் மேலும் 45 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில் பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம், ஹரியானாவிலுள்ள பானிபட், மேற்குவங்கத்திலுள்ள நாடியாவில் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் அகர்வால் குறிப்பிட்டார்.
Comments