தாய்படும் பாடே சேய்க்கு தாலாட்டு..! 20 நாட்கள் பிரிவும் சந்திப்பும்

0 7802
வீடு திரும்பாத செவிலியர் 20 நாட்கள் கழித்து சேயை கண்டால் என்ன நடக்கும்..! கொரோனாவை கடந்த தாய் பாசம்

3 வயது மகளை பிரிந்து கொரோனா பாதித்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவந்த செவிலியர் ஒருவர் 20  நாட்களுக்கு பின்னர் தனது மகளை சந்தித்தார்.

பெற்ற தாயை கண்எதிரே பார்த்தும் அள்ளி அணைக்க இயலாமல் தவித்த அந்த சிறுமியின் தற்காலிக பரிதவிப்பு, பிரிக்க இயலாத பாசப்பிணைப்பான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. முகத்தில் மாஸ்க் அணிந்த நிலையில் கண்ணீருடன் நிற்கும் இவர்தான், கர்நாடக மாநிலம் பெலாகவி இன்ஸ்டியூட் ஆப் விங் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்துவரும் சுகந்தா...!

 சுகந்தா, மருத்துவமனையில் கொரானா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததால் வீட்டிற்கு செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் வீட்டிற்கு சென்றால் தனது 3 வயது குழந்தைக்கு தன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று ஏதும் பரவி விடுமோ என்ற அச்சம் காரணமாக அவரும் வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாட்டின் பேரில் மற்ற செவியர்கள் போல தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தனி அறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு எச்சரிக்கையுடன் தினமும் பணிக்கு சென்று வந்தார்.

இடையில் ஒரு நாள் தாயை பார்க்க அழுது அடம் பிடித்து வந்த அவரது 3 வயது மகளை, தனிமைப்படுத்திக் கொண்டு தங்கி இருந்த விடுதிக்கு அழைத்து சென்றார் அவரது தந்தை. அந்த விடுதிக்கு வெளியே தாயும் சேயும் 10 அடி தூரத்தில் விலகி நின்றபடி நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டாலும் ஒருவரை ஒருவர் தொட்டுக்கூட பேச இயலாததால் தன்னை கைநீட்டி அழைத்து அழுத தன் குழந்தையை தூக்க இயலவில்லையே என்று செவிலியர் சுகந்தா கண்ணீர் விட்டார்

தன்னால் தனது குழந்தைக்கு நோய் தொற்று வந்துவிடக்கூடாது என்பதால் மனதை கல்லாக்கி பிரிந்திருந்த சுகந்தா, 20 நாட்கள் கடந்த நிலையில் அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏதும் இல்லை என்று பரிசோதித்து அறிந்து கொண்ட பின்னர் சனிக்கிழமை பத்திரமாக வீட்டிற்கு திரும்பினார்.

தனது தாய் வீட்டிற்கு வருகிறார் என்பதை அறிந்ததும் ஏக்கத்துடன் வெளியில் வந்த சிறுமி தாயை கண்டதும் உற்சாகத்துடன் தெருவில் ஓடிச்செல்ல, தனது குழந்தையை ஆசையோடு வாரி அணைத்து தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார் சுகந்தா..!அன்னையின் அன்புக்கு ஈடுஇணை இந்த உலகில் ஏதும் இல்லை என்பதை சற்று அழுத்தமாகவே உணர்த்தியது இந்த காட்சிகள்..!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தங்களது குழந்தைகளையும், குடும்பத்தையும் பிரிந்து செவிலியர் சுகந்தாவை போலவே இந்தியா முழுவதும் ஆயிரமாயிரம் தாய்மார்கள் மருத்துவராகவும் செவிலியராகவும் மருத்துவமனையில் பணியில் இருக்கின்றனர். அதனால் அனாவசியமாக வெளியில் சுற்றாமல் பாதுகாப்புடன் வீட்டுக்குள்ளேயே இருங்கள், அது தான் நோய் பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தும் என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments